அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன இளைஞர் உயிர்! தடுப்புகள் இன்றித் தோண்டப்பட்ட கால்வாய் பள்ளத்தில் விழுந்து தலையில் கம்பி சொருகி இளைஞர் பரிதாப சாவு ;
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே மதுரவாயில் பைபாஸ் சர்வீஸ் சாலையில், எவ்விதப் பாதுகாப்புத் தடுப்புகளும் இன்றித் தோண்டப்பட்ட மழைநீர் வடிகால்வாய் பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த 25 வயது இளைஞர், கட்டுமானக் கம்பிகள் தலையில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அம்பத்தூர் அத்திப்பட்டு ஐ.சி.எப் காலனியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது 25). இவர் பட்டரைவாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணி முடிந்தும் வீட்டிற்குச் செல்லாமல், அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து மதுரவாயில் பைபாஸ் சர்வீஸ் சாலை வழியாக நூம்பல் நோக்கித் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்தச் சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காகப் பள்ளம் தோண்டப்பட்டு, தடுப்புகள் ஏதும் மின்றி திறந்த நிலையில் இருந்தது.
இருள் சூழ்ந்த அந்தப் பகுதியில் வேகமாக வந்த ஹரிபிரசாத், பள்ளம் இருப்பதை அறியாமல் இருசக்கர வாகனத்துடன் உள்ளே விழுந்துள்ளார். இதில், கட்டுமான பணிகளுக்காக நடப்பட்டிருந்த இரும்புக் கம்பிகள் அவரது தலையில் ஆழமாகச் குத்தியதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணா நகர் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார், ஹரிபிரசாத்தின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அம்பத்தூர் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் கழிவுநீரை மதுரவாயில் அருகே கூவம் ஆற்றில் கலப்பதற்காக இந்தச் சர்வீஸ் சாலையில் கால்வாய் தோண்டப்பட்டு வருகிறது. இப்பணியின் போது முறையான பாதுகாப்புத் தடுப்புகள் (Barricades) மற்றும் எச்சரிக்கை விளக்குகள் அமைக்கப்படாததே இளைஞரின் உயிரிழப்புக்கு முழுக் காரணம் எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னை மாநகராட்சி மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளின் கடுமையான அலட்சியமே ஒரு இளைஞரின் உயிரைப் பறித்துவிட்டதாக உயிரிழந்த ஹரிபிரசாத் நண்பர்களும் உறவினர்களும் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளனர்.
எதிரொலி . இன் / 8939476777
