ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியாக கஞ்சா போதைப் பொருள் கடத்தி வருவது குறித்து மாவட்ட எஸ்பி.க்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து மாவட்ட எஸ்பி., வி.வி.சாய்பிரனீத் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, தமிழக ஆந்திர எல்லையான திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்களை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை நடத்தியதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 12 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், கஞ்சாவை கடத்தி வந்தது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முத்துக்காளை (30) மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (32) என்பதும் தெரியவந்தது. மேலும், திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட முத்துக்காளை மற்றும் கார்த்திகேயன் ஆகியோரிடமிருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
செய்திகள் / A. மகேஷ் / எதிரொலி . இன் / 8939476777

