திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய நகர பகுதிகளிலேயே பொன்னேரி மிகவும் பழமையான, பாரம்பரியமான ஒரு கோயில் நகரமாக இருந்து வருகிறது. அதனால் பொன்னேரி நகரம் வருங்காலங்களில் மிகவும் வளர்ந்த ஒரு நகரமாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, தமிழ்நாடு அரசு சென்ற 2021 ம் அக்டோபர் மாதம் 26 ம் தேதி பேரூராட்சியாக இருந்த பொன்னேரியை நகராட்சியாக மாற்றி தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது.


பொன்னேரி, பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக அறிவிக்கப்பட்டு உள்ளதே தவிர, அதற்கான எந்த வலுவான கட்டமைப்பு வசதிகளும் பெரிய அளவில் சீராக செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக பொன்னேரியில் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இன்று வரை அது முடிந்த பாடில்லை,
அதனால், பொன்னேரி நகரத்தில் உள்ள முக்கிய சாலைகள் முதல் சிறிய தெருக்கள் வரை கடந்த பல ஆண்டுகளாக பெரும்பாலான சாலைகள் மிகவும் மோசமான நிலையில் கிடந்தன.
இந்நிலையில், பொன்னேரி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதல் நகராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மருத்துவர் பரிமளம் விஸ்வநாதன் அவர்கள் முடிந்தவரை அனைத்து முக்கிய சாலைகளையும், தெருக்களையும் சீரமைத்து சாலை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

ஆனாலும், அப்படி அமைக்கப்பட்ட பல சாலைகள் தரமற்று சில மாதங்களிலேயே சேதமடைந்து போயிருக்கக் கூடிய நிலையில் தான் உள்ளன. மேலும், சாலைகள் அமைக்கப்பட்ட பல இடங்களில் திடீர் பள்ளங்களும், குழிகளும் ஏற்பட்டு சேதம் அடைந்து கிடைக்கின்றன.
இதற்கு காரணம் பொதுமக்கள் தரப்பில் கூறுகையில்; பணிகள் நடைபெறும் போது அந்த இடத்தில் பொறியாளர்கள் பிரிவில் எந்த அதிகாரிகளும் இருப்பதில்லை, அதனால் ஒப்பந்ததாரர்கள் அவர்களுக்கு விருப்பம் போல் மிகவும் தரம் குறைவாக சாலை அமைத்து விடுகின்றனர்.

உதாரணத்திற்கு, பழைய பேருந்து நிலையம் பகுதியில் கால்வாய் அமைக்கும் பணியில் சிமெண்ட் இல்லாமல் வெறும் மண்ணை கொண்டு கால்வாய் கட்டியதை பொதுமக்கள் சிலர் வீடியோ எடுத்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி, அவர் இங்கு உள்ள நகராட்சி அதிகாரிகளை கண்டித்த உடன், அந்த கால்வாய் இடிக்கப்பட்டு மீண்டும் முறையாக சிமெண்ட் வைத்து கட்டப்பட்டது.
அதேபோல், பல இடங்களில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்ட தொகையில் சாலை அமைக்க முடியாது என ஒப்பந்ததாரர்கள் வேலையை பாதியில் நிறுத்திவிட்டு, பின்னர் மீண்டும் பல லட்ச ரூபாய் உயர்த்தி திட்ட மதிப்பீடு செய்து சாலை அமைத்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளன.

சில பணிகளுக்கு, அதிகாரிகள் திட்ட மதிப்பீடு செய்து பின்னர் அந்த குறிப்பிட்ட பணியை செய்த பிறகும், அந்த தொகை மீதம் இருந்ததால், அதே மதிப்பீட்டு தொகையில் மேலும் இரண்டு, மூன்று பணிகள் செய்த சம்பவங்களும் நடந்துள்ளது.
இப்படி, பொன்னேரி நகராட்சி நிர்வாகம், கடிவாளம் இல்லாத குதிரை போல், செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு உதாரணம் கூற வேண்டும் என்றால், வடகிழக்கு பருவமழை பாதிப்பு இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் தொடர்ந்து மூன்று மாதங்களாக நகர மன்ற கூட்டம் நடைபெறாமல் இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது.
நகராட்சியில் பல இடங்களில், தெருக்கள் சீரமைக்கப்பட்டு, தார் சாலைகளாகவும், சிமெண்ட் சாலைகளாகவும் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், என் ஜி ஓ நகர் விரிவாக்கம் பகுதியில் உதயம் நகர், பி.ஆர்.கே நகர் பகுதிகளில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலைகள் மிகவும் மோசமாக அமைக்கப்பட்டு சில மாதங்களிலேயே சேதம் அடைந்து கிடைக்கின்றன. அதைக் கூட முழுமையாக அமைத்துக் கொடுக்கவில்லை. குறிப்பாக, ஸ்ரீ சாய் நகர் செல்லும் சாலைக்கு முகப்பில், முன்பாகவும் அதை கடந்தும் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால், குறைந்தது ஒரு 100 மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்காமல் விடப்பட்டுள்ளது.
அது குறித்து, அந்த பகுதி கவுன்சிலர் ஆனந்த் அவர்களிடம் விசாரித்ததில்,
“இன்னும் சில மாதங்களில் அந்த சாலையை அமைத்து கொடுத்துவிடுகிறோம் ” என கூறுவார். அவர் நல்லவர் வார்த்தை தவறமாட்டார். காரணம், கடந்த மூன்று ஆண்டுகளாக இதையே சொல்லி கொண்டிருக்கிறார். அவர் என்ன செய்ய முடியும் முந்தைய ஆட்சியிலும் அவர் எதிர்க்கட்சி உறுப்பினர், இந்த ஆட்சியிலும் அவர் எதிர்க்கட்சி உறுப்பினர், என்று நினைத்து கொண்டு அப்பகுதி மக்கள் அவருக்கு ஆதரவாக பொறுமைகாத்து வருகின்றனர்.
மேலும், அப்பகுதி மக்கள் தங்கள் செலவில்லையே அந்த சாலையை மண் கொட்டி சீரமைத்து கொள்கிறோம், என்று கேட்டாலும் அதையும் செய்ய விடமாட்டார். அதற்கு காரணம், நகராட்சி அதிகாரிகள் அவரிடம் இரண்டு மாதங்களில் சாலை அமைத்துக் கொடுக்கிறோம், என்று பலமுறை தொடர்ந்து பொய் கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை என்பதும், அப்பகுதி மக்களுக்கு நன்றாகவே தெரியும். கவுன்சிலர் என்ன செய்வார்,
இப்படி, பொன்னேரி நகராட்சி நிர்வாகம், எந்த வேலையும் முழுமையாக செய்வது இல்லை, அப்படி செய்யக்கூடிய வேலைகளை கூட தரமாக செய்வதில்லை, என்பதுதான் பொன்னேரி நகர மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
செய்திகள் : P.G.பாலகிருஷ்ணன் எதிரொலி . இன் / 8939476777
