விஜயதசமியை முன்னிட்டு கல்விக்கு அதிபதியாம் சரஸ்வதி தேவியை நினைத்து முதன் முறையாக எழுதப் பயிலும் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவு புகட்டும் நிகழ்ச்சி பல்வேறு கோவில்களில் சிறப்பாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருள்மிகு கோதண்டராமசாமி கோவிலில் எழுத்தறிவு போகட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது.

கோவில் நிர்வாகிகள் ஏற்பாட்டின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து பெரிய தட்டில் நெல் மணிகள் மற்றும் பச்சரிசியை நிரப்பி அதில் கையைப் பிடித்து ஓம் எனும் பிரணவ மந்திரத்தை முதலில் எழுதி பின்னர் அ,ஆ போன்ற தமிழ் எழுத்துக்களையும் எழுதி பழகினார்கள். புரோகிதர்கள், வேத விற்பன்னர்கள், சிவாச்சாரியார்கள் இதில் கலந்துகொண்டு குழந்தைகளை வழி நடத்திச் சென்றனர்.

அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ஸ்ரீ கோதண்ட ராமர் உற்சவமூர்த்தி எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் பிரசாதம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.
செய்திகள் : ராமகிருஷ்ணன் /எதிரொலி . இன் /. 8939476777
