இந்தியா முழுவதும் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் அவசரக் கோரிக்கைகள் மற்றும் நலன் தொடர்பான கோரிக்கை மனு.
இந்தியன் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் (IJU) சார்பில், 2026 ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தில், மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2, 2026-ஐ “பணிபுரியும் பத்திரிகையாளர்களின் கோரிக்கை நாள்” ஆக கடைப்பிடிப்பது என தீர்மானிக்கப்பட்டது.


தேசிய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படியும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநிலத் தலைவர் மற்றும் தேசிய குழு செயலாளர் தோழர் DSR சுபாஷ் அவர்களின் அறிவுறுத்தலின்படியும்,
தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாளான 02.10.2026 அன்று “பணிபுரியும் பத்திரிகையாளர்களின் கோரிக்கைகள் தினமாக” நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

அதனை முன்னிட்டு, தேசிய மற்றும் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்பேரில், இந்தியா முழுவதும் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் அவசரத் தேவைகள் மற்றும் நலன் தொடர்பான 4 முக்கிய கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை, இந்தியா முழுவதும் அனைத்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பத்திரிகையாளர்களுடைய கோரிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சார ஆட்சியர்கள் உள்ளது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களில் யாரேனும் ஒருவரிடம் அந்த கோரிக்கை மனுக்களை வழங்குவது என முடிவு செய்யப்பட்டு, காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கி அனைத்து மாநில மற்றும் மாவட்ட அளவில் கோரிக்கைகள் வழங்கப்பட்டு வருகின்றன.


அதன்படி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் சுபாஷ் அவர்கள் சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு வாயிலாக கோரிக்கை மனுவை வழங்கினார்.
அதேபோல் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திண்டுக்கல் ராமகிருஷ்ணன் அவர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினார்.


திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சங்கம் சார்பில், தேசிய குழு உறுப்பினர் ஜி.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.கே.குசேலன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் முத்து ஆகியோர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வகுமாரிடம் வழங்கினர்.


- விரிவான ஊடக ஆணையம் அமைக்க வேண்டும்
இரண்டாவது பத்திரிகை ஆணையம் 1978ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, 1982ஆம் ஆண்டு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் பின்னர் கடந்த நான்கு தசாப்தங்களில் இந்திய ஊடகத் துறை மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்துள்ளது.
24 மணி நேர தொலைக்காட்சி ஒளிபரப்பு, டிஜிட்டல் செய்தித் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்டவை பொதுமக்களின் கருத்து உருவாக்கத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இத்தகைய மாற்றங்களுடன் உருவாகியுள்ள சட்டம், தொழில்நுட்பம் மற்றும் நெறிமுறை சார்ந்த சிக்கல்களை கருத்தில் கொண்டு, தற்போதைய காலத்திற்கு ஏற்ற கொள்கை பரிந்துரைகளை உருவாக்கும் வகையில், ஊடகத் துறையை முழுமையாக ஆய்வு செய்ய புதிய விரிவான ஊடக ஆணையம் அமைக்க வேண்டும். - பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு மத்திய சட்டம் இயற்ற வேண்டும்
பத்திரிகைத் துறை இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்குகிறது. சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான ஊடகச் சூழல், ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானதாகும்.
ஆனால், தற்போது பத்திரிகையாளர்கள் மீது குறிவைத்து நடத்தப்படும் உடல் ரீதியான தாக்குதல்கள், தன்னிச்சையான கைது மற்றும் தடுப்புக் காவல்கள், இணையவழித் துன்புறுத்தல்கள் மற்றும் நிறுவன ரீதியான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன.
எனவே, பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் தங்களது கடமைகளை அச்சமின்றி மேற்கொள்ளும் வகையில், பத்திரிகையாளர்கள், ஊடகப் பணியாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களை வன்முறை மற்றும் தேவையற்ற அடக்குமுறைகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் தனியான வலுவான மத்திய சட்டம் இயற்ற வேண்டும். - பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கான சட்டப்பூர்வ பாதுகாப்புகளை மீண்டும் கொண்டு வந்து பாதுகாக்க வேண்டும்
1955ஆம் ஆண்டின் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் பிற செய்தித்தாள் ஊழியர்கள் (பணி நிபந்தனைகள் மற்றும் இதர விதிமுறைகள்) சட்டம் மற்றும் 1958ஆம் ஆண்டின் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கான ஊதிய விகித நிர்ணயச் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஊடகப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்புகள், புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் கொண்டு வரப்பட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்டங்கள், செய்தித் துறையின் தனித்துவமான பாதிப்புகளை போதுமான அளவில் கையாளவில்லை. இதனால் வேலைப் பாதுகாப்பு, சட்டப்பூர்வ பணி நேர வரம்புகள், தொழிலாளர் பிரச்சினைகளுக்கான தீர்வு முறைகள் மற்றும் நியாயமான பணிநீக்க நிவாரணம் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, 1955 மற்றும் 1958ஆம் ஆண்டுகளின் சட்டங்களின் கீழ் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சட்டப்பூர்வ பாதுகாப்புகளை உடனடியாக மீண்டும் கொண்டு வர வேண்டும். - ஊடகப் பணியாளர்களுக்காக புதிய ஊதிய வாரியம் அமைக்க வேண்டும்
பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகை அல்லாத ஊழியர்களுக்கான கடைசி சட்டப்பூர்வ ஊதிய வாரியமான மஜிதியா ஊதிய வாரியம் 2007ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன்பிறகு கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் கடந்துவிட்டன.
இந்நிலையில், வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கம் பெருமளவில் உயர்ந்துள்ளதுடன், அரசு மற்றும் தனியார் துறைகளில் ஊதியங்கள் அவ்வப்போது மறுஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் ஊடகத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சட்டப்பூர்வ ஊதிய மறுஆய்வு கிடைக்கவில்லை.
எனவே, அச்சு, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணிபுரியும் அனைவரையும் உள்ளடக்கிய வகையில் புதிய ஊதிய வாரியம் அமைத்து, பணவீக்கத்துக்கு ஏற்ப நியாயமான ஊதிய கட்டமைப்பை பரிந்துரைக்க வேண்டும்.
நிறைவுக் கோரிக்கை
சுதந்திரமான, துடிப்பான மற்றும் பொருளாதார ரீதியாக பாதுகாப்பான பத்திரிகைத் துறை, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.
எனவே, மேற்கண்ட நீண்டகாலக் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மத்திய அரசு விரைந்து பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு தங்களது அலுவலகத்தின் மூலம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

போன்ற நான்கு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, அகில இந்தியா அளவில் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில், ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
செய்திகள் : லெனின் லோகேஷ் /எதிரொலி . இன் / 8939476777
