“வாழ்வியலில் சமூக மாற்றத்துக்கான தத்துவங்களை பாடல்களாக தந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்”
“வாழ்வியலில் சமூக மாற்றத்துக்கான தத்துவங்களை பாடல்களாக தந்தவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்” என கவிஞர் சு.வெற்றிச்செல்வன் தெரிவித்தார்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாளையொட்டி வாங்க பேசுவோம்…, பாடுவோம்… இலக்கிய அமர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வேதாரண்யம் கிளைத் தலைவர் இள. தொல்காப்பியன் தலைமை வைத்தார். அமைப்பின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ஆர்.சுப்பிரமணியன், நல்லாசிரியர் வீ. வைரக்கண்ணு,
துணைச் செயலாளர் தி.செந்தில்நாதன், துணைத் தலைவர் த.சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில்,கவிஞர் சு.வெற்றிச்செல்வன் பங்கேற்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேசினார்.
அப்போது அவர் பேசியது:
தனிமனித வாழ்வியலில் சமூக மாற்றத்துக்கான சிந்தனைகளையும், தத்துவங்களையும் பாடல்களாகத் தந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். உழைப்பவரின் பெருமையை உயர்த்திப்பிடித்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும், தொழிலாளர், பெண்கள், சாமானிய மக்களின் விடுதலைக்கும் தனது பாடல்களால் புதிய நம்பிக்கையை தந்தவர்.பாடல்களில் பொதுவுடமைக் கருத்துகளுக்கு வலுசேர்த்தவர்.
எந்த காலத்திலும் மக்களின் வாழ்வில் நிலைத்து நிற்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களை இன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கொண்டு சேர்ப்பது அவசியம். இந்தப் பணியில் இலக்கிய அமைப்புகள் முனைப்புக் காட்ட வேண்டும் என்றார் அவர்.

விழாவில், மாவட்டச் செயலாளர் தென்னடார் அம்பிகாபதி,
கவிஞர்கள் வீ.ராஜா,வீ. கார்த்திகேயன், தேவி சரவணன், ஆயை மணிமாறன், எழுத்தாளர் தங்க.நாகேந்திரன், தலைமையாசிரியர்கள் சு.பாஸ்கரன், வே.சித்திரவேலு, கவிஞர் சு.தமிழ்ஒளி, ஓவியர் நித்யா, சுமா செல்வராசு உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
கவிஞர்கள் இரா.ஜெயசீலன், எஸ்.பண்டரிநாதன், வ. கண்ணையன், தங்கவேல் ஆகியோர் பட்டுக்கோட்டையாரின் பாடல்களை பாடினர். முன்னதாக கிளைச் செயலாளர் த.குழந்தைவேலு வரவேற்றார் . துணைச் செயலாளர் வீ. சத்யராஜ் நன்றி தெரிவித்தார்.
செய்திகள் : மணிவண்ணன் எதிரொலி . இன் / 8939476777
