தென்னக ரயில்வே மதுரை கோட்டத்தில் மதுரையில் இருந்து புண்ணியத்தலமான ராமேஸ்வரம் செல்லும் பாதையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ரயில்வே நிலையம் அமைந்துள்ளது.
பரமக்குடியைச் சுற்றிலும் எண்ணிலடங்காத கிராமங்கள் சூழ்ந்துள்ளதால் பரமக்குடி வளர்ந்து வரும் பெரிய நகரமாகும். இந்நகரத்தில் மட்டும் தற்போது சுமார் 1 லட்சத்தி 33 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனர்.
மேலும், இங்கு உள்ள ரயில் நிலையம் வாயிலாக இளையான்குடி, நயினார்கோவில், முதுகுளத்தூர், கமுதி, பார்த்திபனூர் உள்பட சுற்றியுள்ள கிராம மக்கள் மதுரை, சென்னை, கன்னியாகுமரி, கோவை, திருப்பதி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு செல்வதானால் இந்த ரயில் நிலையத்தின் வாயிலாக சென்று வருவார்கள்.
அதனடிப்படையில், மதுரை கோட்டத்தில் வருடாந்திர பயணிகள் வருமானம் சராசரி 11, 24,48, 241 / = ஆகும். இந்த ரயில் நிலையத்தில் 12 தினசரி ரயில்களும், 18 வார முறை ரயில்களும் நின்று செல்கின்றன.

இந்நிலையில், பரமக்குடியைச் சேர்ந்த அனைத்து பொது நல அமைப்புகள், அரசியல் கட்சியினர்கள், பொதுமக்கள் நீண்ட காலமாக இந்த ரயில் நிலையத்தை சீரமைத்து வட நாட்டுக்கு செல்லும் அனைத்து ரயில்கள், அதிவிரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயிலும் இரு மார்க்கத்திலும் நின்று செல்வது போன்று அமைக்கப்பட வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை வைத்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து 13.96 கோடி மதிப்பீட்டில் ரயில் நிலையத்தில் நுழைவு வாயில், வெளியே செல்லும் பகுதியில் தோரண வாயில், மூன்று நடை மேடைகளுடன் இணைக்கும் 6 மீட் அகல நடை மேம்பாலம், பழைய நடைமேம்பாலத்தை எளிதாக பயன்படுத்த 2 மின் தூக்கிகள், நடைமேடைகள்ல் இரவு நேரத்தில் மின் விளக்குகள், ஆங்காங்கே பயணிகள் வசதிக்காக இருக்கைகள், மின்விசிறிகள், குடிநீர் குழாய்கள், தகவல்களை தெரிவிக்க ஒருங்கிணைந்த நவீன வசதி, குறியீடுகளுடன் கூடிய வழிகாட்டு பலகைகள், ரயில் கால அட்டவணை, வாகன நிறுத்தங்கள் விரிவு படுத்தப்பட்டுள்ளது. அணுகு சாலையை இரண்டாகப் பிரிக்கும் பகுதியில் பசுமை பூங்கா அமைப்புகள் என பல்வேறு வகையில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
ரூ 13.96 / = மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட பரமக்குடி ரயில் நிலையத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து பயணிகளுக்கு அர்ப்பணித்தார். இதனையொட்டி, பரமக்குடி ரயில் நிலையத்தில் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தென்னக ரயில்வே சென்னை முதன்மை வணிக மேலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மதுரை கோட்ட வணிக மேலாளர் கவிதா முன்னிலை வகித்தார். முதன்மை கோட்ட பொறியாளர் (ஒருங்கிணைப்பு) எம். கார்த்திக் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் நினைவுப் பரிசும், சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், பரமக்குடி சார் ஆட்சியர் மரு.ச. வினோதினி, ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி, மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் கே.கே. கதிரவன், பரமக்குடி நகர்மன்றத் தலைவர் சேது கருணாநிதி, நகர்மன்ற உறுப்பினர் வடமலையான் , பரமக்குடி வியாபாரிகள் சங்கத் தலைவர் ராசி என். போஸ் , மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் , பரமக்குடி வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சரவணன், இணைச் செயலாளர் மா.மணவாளன் உள்பட வியாபாரிகள் சங்கத்தினர்கள், பாரதீய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் பொன்பால கணபதி, மத்திய கயிறு வாரியத் தலைவர் சுப.நாகராஜன், மாவட்டத் தலைவர் முரளிதரன் உள்பட கட்சியினர்கள், அனைத்து பொது நல அமைப்பினர்கள், பள்ளி மாணவர்- மாணவியர்கள் , பரமக்குடி ரயில் நிலைய அதிகாரிகள் ஐயப்பன் , கோவிந்தன், போக்குவரத்து ஆய்வாளர் சரவணன், ரயில் நிலைய அலுவலர்கள் உள்பட பயணிகள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்னக ரயில்வே மதுரை கோட்ட அதிகாரிகள் தலைமையில் செய்தி – மக்கள் தொடர்பு அலுவலர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
