சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், 45-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வருகிற பிப்,13-ம் தேதி தெற்குரதவீதி ராஜாசர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் தொடங்கி பிப்.17-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. என அறக்கட்டளை செயலாளர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 1981-ல் நாட்டியாஞ்சலி விழா தொடங்கப்பட்டு 2014 வரை 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வந்தனர். இந்நிலையில், நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து,

2015-ம் ஆண்டு பொதுதீட்சிதர்களே நாட்டியாஞ்சலியை நடத்துவதாக அறிவித்து கோயிலில் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் நாட்டியாஞ்சலியை நடத்தினர். இதனால், நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் தெற்குவீதியில் வி.எஸ் டிரஸ்ட் வளாகத்தில், நாட்டியாஞ்சலி விழா நடத்தி வந்தனர். நடராஜர் கோயிலில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் கோயில் பொதுதீட்சிதர்கள் நடத்தி வந்த நாட்டியாஞ்சலி விழா 2022 ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு 45-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் வருகிற பிப்.13-ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து, நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளர் வழக்குரைஞர் ஏ,சம்பந்தம் தெரிவித்தது: 45 வது நாட்டியாஞ்சலி விழா தொடக்கத்தில் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற திருமறை ஓதுவார் திருத்தணி என்.சுவாமிநாதனுக்கு பாராட்டி கௌரவிக்கப்பட உள்ளார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற செயலாளர் விஜயா தாயன்பன் வாழ்த்துரை ஆற்றுகிறார். நாட்டியாஞ்சலியில் நாடகம், கதக், கூச்சுப்புடி, மணிப்புரி நடனம் உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. வடமாநிலங்களிலில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டிய அஞ்சலி செலுத்துகின்றனர். நாட்டியாஞ்சலியில் தேவார பன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது, என தெரிவித்தார்.

நாட்டியாஞ்சலி விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் டாக்டர் ஆர்.முத்துக்குமரன், துணைத்தலைவர்கள் சக்தி ஆர்.நடராஜன், ஆர்.ராமநாதன், செயலாளர் ஏ.சம்பந்தம், பொருளாளர் எம்.கணபதி மற்றும் உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, ஆர்.சபாநாயகம், டாக்டர்,எஸ்.அருள்மொழிச் செல்வன், வி.முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
எதிரொலி / 8939476777
