தீபாவளித் திருநாளை முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன், கதிரொளி வெல்னஸ் சென்டர் சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகரில் நடைபெற்றது.கதிரொளி வெல்னஸ் சென்டர் நிர்வாகியும், லயன்ஸ் கிளப் வட்டாரத் தலைவருமான சரவணன் முன்னிலையில் லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் தலைவர் ஹேமலதா, சங்க செயலரும், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான யோகா ஆசிரியர் விஜயகுமார், ஸ்ரீ சக்ரா இயற்கை மருத்துவமனை மருத்துவர் கௌதம் உள்ளிட்டோர் நகரின் தூய்மையைப் பாதுகாக்க பொதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பையினை வழங்கினர்.
இன்றைய காலகட்டத்தில் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் நெகிழிப் பைகளால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மண் வளம், நீர்நிலைகள், கால்நடைகள் மற்றும் உயிரினங்களுக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன.
இதனைத் தடுக்கும் நோக்கில், பொதுமக்கள் கடைகளுக்குச் செல்லும்போதும் பொருட்கள் வாங்கும்போதும் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தப்பட்டன.
தீபாவளி என்பது மகிழ்ச்சியையும் ஒளியையும் பகிர்ந்து கொள்ளும் திருநாள். அந்த மகிழ்ச்சியுடன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கைக்கு உகந்த வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
மஞ்சள் துணிப்பை என்பது வெறும் பொருட்களை எடுத்துச் செல்லும் பை மட்டுமல்ல; அது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான அடையாளம், இயற்கையை நேசிப்பதற்கான செய்தி, எதிர்காலத் தலைமுறைக்கு நாம் வழங்கும் பொறுப்புணர்வு ஆகும்.
சிறிய மாற்றங்கள் பெரிய சமூக மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதை உணர்த்தும் வகையில் லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் மேற்கொண்ட இம்முயற்சி பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயனுள்ள சேவை நிகழ்ச்சியாக அமைந்தது.
பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம்! துணிப்பையைப் பயன்படுத்துவோம்! இயற்கையைக் காப்போம்! சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மகிழ்ச்சியான, மாசில்லா தீபாவளியைக் கொண்டாடுவோம்!
செய்திகள் : விஜயகுமார் எதிரொலி . இன் / 8939476777
