மதுரை மத்திய சிறை வளாகத்தில் காவலர் ஒருவர் கைதியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
​

சம்பவம் பின்னணி:

மதுரை மத்திய சிறையில் தற்போது 9,000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை சிறையின் ‘சி-பிளாக்’ (C Block) பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான கைதிகள் குளிப்பதற்காக வெளியே வந்தனர். அச்சமயத்தில் பாதுகாப்பு பணியில் நான்கு காவலர்கள் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது.
​

அப்போது, கைதி மூர்த்தி (44) என்பவர் குளியலறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு பணி மேற்பார்வையில் இருந்த தலைமை காவலர் தெய்வநாயகம், கைதியை கண்டித்து பேசியதாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே திடீரென காரசாரமான வாக்குவாதம் உருவானது.
​

ஆத்திரமடைந்த கைதி மூர்த்தி, தலைமை காவலர் தெய்வநாயகத்தை முகத்தில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில், அவரது கண்கள் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தைக் கண்ட சக கைதிகள் சிலர் தடுக்காமல் வேடிக்கை பார்த்த நிலையில், விரைந்து வந்த மற்ற சிறைக் காவலர்கள் காயமடைந்த தெய்வநாயகத்தை மீட்டு சிறை வளாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இத்தாக்குதல் குறித்து, கைதி மூர்த்தியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
​

காவலர்களின் குற்றச்சாட்டு & கோரிக்கை, இச்சம்பவம் குறித்து, சிறை காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது ;
​

“தேனி சிறை தப்பியோட்டம் சம்பவத்திற்குப் பிறகு மதுரை சிறையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தில் பணியாற்றி வரும் எங்களுக்கு, கைதிகளின் இத்தகைய மிரட்டல்கள் மேலும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
​சிறை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற டி.ஜி.பி. திரிபாதி தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் காவலர்கள் தரப்பிலும் ஒருவரை உறுப்பினராகச் சேர்க்க வேண்டும்.

அப்போதுதான் களத்தில் நாங்கள் சந்திக்கும் அடிப்படைப் பிரச்சினைகளையும் பாதுகாப்பு அச்சங்களையும் உயர் அதிகாரிகளுக்குச் சரியாக எடுத்துரைக்க முடியும். பல ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சோகமான நிகழ்வுகள் மீண்டும் நடந்துவிடக் கூடாது. காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed