திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள அனுப்பம்பட்டு பாலாஜி நகர் பகுதியில் தாழ்வான மின் கம்பியில் உரசி ஒரு புள்ளிமான் மற்றும் 2 மாடுகள் இறந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள அனுப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் இவர் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அவர் மாடு மற்றும் ஆடுகளை வளர்த்து அதன் மூலம் சிறிது வருவாய் கிடைக்கும் என்ற நோக்கத்தில் அவைகளை பராமரித்து வருகிறார். அந்த மாடுகளை, அவருடைய மனைவி அனிதா தினமும் தங்களுடைய வீட்டிற்கு அருகே உள்ள பாலாஜி நகர், ராமகிருஷ்ணா நகர் பகுதியில் இருக்கக்கூடிய இடங்களில் மேய்ச்சலுக்கு கொண்டு போவது வழக்கம்,

அதே போல், இன்றும் அனிதா தங்களுடைய மாடுகளை அவிழ்த்து விட்டு, விட்டு பின்னால் சென்று இருக்கிறார். அப்போது அனிதாவிற்கு முன்பாக தண்ணீரில் இறங்கி சென்று கொண்டிருந்த மாடுகள் திடீரென துடிதுடித்து கீழே விழுவதை பார்த்து அதிர்ந்து போய் பார்த்தபோது, மாடுகள் தாழ்வாக சென்ற மின்சார ஒயரில் சிக்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு அலறி இருக்கிறார்.
அனிதாவின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு ஏற்கனவே தாழ்வாக சென்று கொண்டிருந்த மின்சார வயரில் சிக்கி அனிதா மேய்ச்சலுக்காக கொண்டு வந்த மாடுகள் மட்டுமில்லாமல் ஏற்கனவே அந்த மின்சார ஒயரில் ஒரு மானும் சிக்கி இறந்து போய் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

நடந்த சம்பவத்தை கேள்விப்பட்ட, மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, தாழ்வாகச் சென்று கொண்டிருக்கக்கூடிய மின்சார வயரில் செல்லக்கூடிய மின்சாரத்தை துண்டித்தனர். அதன் பிறகு மின்சார ஒயரில் சிக்கிய இரண்டு மாடுகளையும் ஒரு மானையும் மீட்டனர்.
இது குறித்து, இரண்டு மாடுகளை இழந்த அனிதா கூறுகையில் :
இப்போது இறந்து போன ஒரு மாடு சில தினங்களுக்கு முன்னர் தான் கன்று ஈன்றுள்ளது. இந்நிலையில் அந்த மாடும் மின்சார வயரில் சிக்கி இறந்ததால், எங்கள் குடும்பத்தினுடைய வாழ்வாதாரமே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனக்கூறி கதறி அழுதார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ;
நாங்கள், கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே, “இந்த இடத்தில் மின்சார ஒயர் மிகவும் தாழ்வாக சென்று கொண்டிருக்கிறது. இதை பழுது பார்த்து, மின்சார ஒயர்களை மாற்றி அமைத்துக் கொடுங்கள்” என மின்வாரிய ஊழியர்களிடம் பலமுறை புகார் செய்திருக்கிறோம். மேலும், ஊராட்சி செயலாளரும் மின்வாரியத்தில் புகார் செய்து இருப்பதாக எங்களிடம் தெரிவித்தார்.
ஆனால், மின்வாரிய ஊழியர்கள் இந்த தாழ்வாக சென்ற ஒயர்களை சரி செய்யாததால் தற்போது இரண்டு மாடுகளும், ஒரு மானும் உயிரிழந்து உள்ளது. இந்த சம்பவத்தில் மாடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு வந்த அனிதாவை கடவுள் தான் காப்பாற்றியுள்ளார், எனக் கூறி வருத்தப்பட்டனர்.
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, மன்னா கம்பெனி பின்புறம் உள்ள பகுதியில், மூலதாங்கல் கிராமத்தை சேர்ந்த துலுக்காணம் என்பவர், தனது மாட்டை மேய்ச்சலுக்காக கொண்டு வந்த போது, இதேபோல், தாழ்வாக சென்ற மின்சார உயிரில் சிக்கி, துலுக்கானமும் அவருடைய மேச்சலுக்கு கொண்டு வந்த மாடும் பலியான சம்பவமும் நடந்துள்ளது.

இந்த அனுப்பம்பட்டு பகுதியில் பல இடங்களில் மின்சார ஒயர்கள் இதே போல் தாழ்வாக செல்வதும், மிகவும் பழுதடைந்த பல மின்கம்பங்கள் உடைந்து விழக்கூடிய நிலையிலும் இருந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண்டியார் பாளையம் பகுதியில் சில மின்கம்பங்களை மின்சார துறையினர் மாற்றி அமைத்தனர். இருந்தாலும் மீதமுள்ள பழுது அடைந்த மின் கம்பங்களையும் மாற்றி அமைத்து விட்டால், இது போன்ற விபத்துகள் நேராமல் தடுக்கலாம் என்பது, அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777
