விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மது பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது. இதில் “மது” கலயத்திலிருந்து பொங்கி வழிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வத்திராயிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோவில் தேரோட்ட திருவிழா ஒரு வார காலம் நடைபெறும். இத்திருவிழாவின் துவக்கமாக மது பொங்கல் விழா நடைபெறும். ஊரின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள வடக்காச்சி அம்மன் கோவிலில் நடைபெறும் இந்த திருவிழாவில் மண் கலயத்தில் பல்வேறு வகையான தானியங்களின் மாவு கரைசலை ஊற்றி வைப்பார்கள். அந்த மாவு கரைசலுக்கு “மது” என்று பெயர். அதனை விரதம் இருந்த பருவமடையாத சிறுமியின் தலையில் வைத்து ஊர்வலமாக கோயிலை சுற்றிவர செய்வார்கள்.
அச்சிறுமி வீட்டில் இருந்து கோவிலை அடைந்து கோவிலை
மூன்று முறை சுற்றி வந்த பின்னர் கோவில் முன்பாக உள்ள பலி பீடத்தில் அதனை இறக்கி வைப்பார். அச்சிறுமி இறக்கி வைத்த சில நிமிடங்களில் கலயத்தில் உள்ள அந்த “மது” பொங்கி வழியும். அவ்வாறு பொங்கி வழிந்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல மழை பெய்து ஊர் செழிப்படையும். பொங்காவிட்டால் அந்த வருடம் முழுவதும் வறட்சியும் பஞ்சமும் தலைவிரித்தாடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு கோயிலில் கோலாகலமாக நடந்தது காலையில் அம்மனுக்கு பல்வேறு வகை அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடந்தது. ஏராளமான பெண்கள் கோயிலுக்கு முன்பாக பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் இட்டு வழிபாடு செய்தனர். மாலையில் நடந்த சிறப்புக்கு பூஜைகளுக்கு பின் இரவு மது கலய ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தின் முடிவில் கலயத்திலிருந்து மது பொங்கி வழிந்ததால் கோயிலைச் சுற்றிலும் நின்ற பெண்கள் குலவையிட்டும் பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதன் பிறகு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடந்தது. தேரோட்டத்தின் போது தேருக்காக சேவை செய்பவர்களுக்கும் பல்வேறு சமுதாய நாட்டான்மைகளுக்கும் மரியாதை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பக்தர்கள் திருவிழா ஏற்பாடுகளை செய்தனர்.
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777
