​காஞ்சிபுரம் ஒலி முகமது பேட்டை, தேவராஜபுரம் வேணுகோபால் தெருவைச் சேர்ந்த சரஸ்வதி குமார் தம்பதியின் மகன், அங்குள்ள ஆந்திரேசன் மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார்.

​நேற்று இரவு சுமார் 10.00 மணியளவில், பெரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே உள்ள ராஜ் எலக்ட்ரிகல் கடை முன்பாக அம்மாணவர் வீட்டிற்குச் செல்வதற்காக ஆட்டோவிற்காகக் காத்திருந்துள்ளார்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம வாலிபர் ஒருவர், “உன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, உடனே உன்னை அழைத்து வரச் சொன்னார்கள்” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே பள்ளி மாணவனின் தந்தை குமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தன்னுடைய அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்பது தெரிந்திருந்தும், மாணவன் பைக்கில் ஏற மறுத்ததால், “அம்மா ஆபத்தான நிலையில் இருக்கிறார்” எனக் கூறி வற்புறுத்தி மாணவனை பைக்கில் ஏற்றிச் சென்றுள்ளார்.

​மாணவனை அம்மன் குளம் வழியாக நான்கு கிலோ மீட்டர் தூரம் அழைத்துச் சென்றபோது, சந்தேகமடைந்த மாணவர் கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், பைக்கை நிறுத்தி கத்தியைக் காட்டி, “பணத்தையும் செல்போனையும் கொடு, இல்லையென்றால் குத்திவிடுவேன்” என மிரட்டியுள்ளார்.

​தொடர்ந்து மாணவனை வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி பணம் ஏதாவது உள்ளதா என ஆராய்ந்து பின்னர், அவரிடமிருந்த 20,000 ரூபாய் மதிப்புள்ள செல்போனைப் பறித்து கொண்டு, மாணவனை விட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டார்.

​பயத்தில் செய்வதறியாது திகைத்த மாணவன், அருகில் இருந்த அரிசி ஆலைக்குச் சென்று அங்குள்ளவர்களின் செல்போனை வாங்கி உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து வந்த உறவினர்கள் அம்மன் குளம் பகுதிக்குச் சென்று மாணவனை மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

நள்ளிரவு கடந்த நிலையில், காலையில் மாணவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஒலிமுகமதுபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பிறகே இச்சம்பவம் வெளியுலகிற்குத் தெரியவந்தது.

​தகவலறிந்த சிவகாஞ்சி மற்றும் பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரிடம் விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தப்பியோடிய மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

​பள்ளி மாணவனை கடத்தி நிர்வாணப்படுத்தி செல்போன் பறிக்கப்பட்ட இச்சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed