பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் திருக்கோவிலில், புரட்டாசி மாத ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி – பூதேவி தாயாருடன் சுவாமி பஞ்ச பருவ புறப்பாடு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவினை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு அழகிய ஊதா நிறப் பட்டாடையும், ஸ்ரீதேவி – பூதேவி தாயார்களுக்குச் சிவப்பு நிறப் பட்டாடைகளும் உடுத்தப்பட்டு, தங்க வைர ஆபரணங்கள் மற்றும் நறுமணம் வீசும் மல்லிகைப் பூ மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.


தொடர்ந்து, ஸ்ரீதேவி – பூதேவி சமேத வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் இருந்து புறப்பட்டு சிறிய திருவடி (ஆஞ்சநேயர்) கோவில் வரை எழுந்தருளினார்.
அங்கு தூப தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் திருக்கோவிலைச் சென்றடைந்தார். புறப்பாட்டின் வழியெங்கும் திரளான பக்தர்கள் சுவாமிக்கு நைவேத்தியம் படைத்து வழிபட்டனர்.


திருக்கோவிலை அடைந்த சுவாமிகளுக்கு வேத விற்பன்னர்கள் வேத பாராயணம் பாட, மகா கும்ப தீபம் காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமிகள் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளினர்.
இந்த பஞ்ச பருவ புறப்பாடு உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளையும் தாயார்களையும் தரிசனம் செய்து அருள் பெற்றனர்.


செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 8939476777
