23 ஆண்டுகால கோரிக்கைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை


தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் பணியாளர்களின் நலனுக்காக மாண்புமிகு அமைச்சர் விக்னேஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை நாம் தமிழர் தொழிற்சங்கம் வரவேற்றுள்ளது.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, எட்டு மணி நேரப் பணி, வாரத்திற்கு ஒருநாள் விடுமுறை, மாதத்திற்கு இரண்டு நாள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு,

250 இளநிலை உதவியாளர்கள் நியமனம் மற்றும் ரூ.20 ஆயிரம் பண்டிகைக் கால முன்பணம் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டதற்காக, மாண்புமிகு அமைச்சருக்கு நாம் தமிழர் தொழிற்சங்கம் சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த அறிவிப்புகள் மட்டும் போதாது என்றும், கடந்த 23 ஆண்டுகளாக டாஸ்மாக் பணியாளர்கள் முன்வைத்து வரும் அடிப்படை உரிமை கோரிக்கைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக, பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணியாளர்களின் வயது வரம்பை 60 ஆக உயர்த்துதல், மதுவிற்பனை நேரத்தைக் குறைத்தல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலி மதுப்புட்டிகளைச் சேகரிக்கும் பணியிலிருந்து டாஸ்மாக் பணியாளர்களுக்கு முழுமையான விடுதலை வழங்கப்பட வேண்டும் என்றும் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

“23 ஆண்டுகளாக உழைத்த தொழிலாளர்களுக்கு சலுகைகள் வேண்டாம்; உரிமைகள் வேண்டும். தற்காலிகத் தீர்வுகள் வேண்டாம்; நிரந்தரப் பாதுகாப்பு வேண்டும்” என தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய மாற்றம் மற்றும் பணியாளர் நல அறிவிப்புகள் வரவேற்கத்தக்க முன்னேற்றங்களாக இருந்தாலும், அவை டாஸ்மாக் பணியாளர்களின் ஒட்டுமொத்தப் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வாகாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“23 ஆண்டுகள் செய்யாததை செய்திருக்கிறீர்கள்; இனி 23 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத உரிமைகளையும் நிறைவேற்றுங்கள்” என்ற வலுவான வேண்டுகோளை மாண்புமிகு அமைச்சர் விக்னேஸ் அவர்களிடம் நாம் தமிழர் தொழிற்சங்கம் முன்வைத்துள்ளது.
தற்போது தொடங்கியுள்ள பணியாளர் நல முன்னெடுப்புகள், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வரலாற்றுச் செயல்பாடாக தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மீதமுள்ள அனைத்து அடிப்படை கோரிக்கைகளுக்கும் காலதாமதமின்றி தீர்வு காண வேண்டும் என்றும், 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு உரிய சமூகப் பாதுகாப்பு மற்றும் பணிப் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில வாணிபக்கழக நாம் தமிழர் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

“அறிவிப்புகளை வரவேற்கிறோம்; ஆனால் உரிமைகள் நிறைவேறும் வரை எங்கள் குரல் ஓயாது” என்றும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

செய்திகள் ; சுரேஷ் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed