எல்.நினோ வெப்ப அலை வீச்சால், தமிழகமெங்கும் நெருப்பாகச் சுட்டெரிக்கும் கடும் வெயில் அடிக்கிறது. பொது மக்கள் வீட்டை விட்டு, வெளியே வரவே தயங்குகின்றனர். நீர் நிலைகள் எல்லாமே வறண்டு போய் விட்டன. கண்மாய்கள் காய்ந்து விட்டன. ஆறுகள் வறண்டு போயுள்ளன. எல்லா ஊர்களிலும் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீநாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவிலுக்குச் சொந்தமான திருமுக்குளத்தின் தெற்குப்பக்கம் உள்ள அருள்மிகு சக்கரத்தாழ்வாருக்கு மழை வேண்டி, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்யவும், வெப்பம் தணிந்து பூமியும் மக்கள் மனதும் குளிர வேண்டியும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் தலைமை அரையர் வடபத்ரசாயி தலைமையில் அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது.

சக்கரத்தாழ்வாருக்கு இளநீர், மஞ்சள், சந்தனம், நல்லெண்ணெய், பால், ஸ்நானப்பொடி, சுத்தமான நீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், இந்து முன்னணி முருகன், சைவ சமயப்பேரவை தர்மராஜ், ஸ்ரீஆண்டாள் பக்தர் பேரவை அமைப்பாளர்களான முத்துலட்சுமி, சொர்ண லட்சுமி, முத்துமாரி, சாஸ்வதா, பொறியாளர் சுதர்சன் மற்றும் வழக்கறிஞரும், எழுத்தாளருமான ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ் கலந்து கொண்டு மழை வேண்டி சிறப்பு வழிபாடு செய்தனர். முடிவில், கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777
