பிரபல கட்டுமான நிறுவனமான அருண் எக்ஸெல்லோ கட்டிய அடுக்குமாடி குடியிருப்பில், ஆண்டுக் கணக்கில் கழிவுநீர் தேங்கி நிற்கும் பேரவலம்.


காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த காரணிதாங்கள் பகுதியில் பிரபல அருண் எக்ஸெல்லோ கட்டுமான நிறுவனத்திற்குச் சொந்தமான மதுலிகா, வசந்தா, ‘அட்டானா’ உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளது. நான்கு பிளாக்குகளைக் கொண்ட இந்த வளாகத்தில் சுமார் 1,000 வீடுகளில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசசித்து வருகின்றனர்.

​இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவுநீரை வெளியேற்ற முறையான வடிகால் வசதிகள் செய்யப்படாததால், குடியிருப்பு வளாகத்திலேயே கழிவுநீர் வெளியேறி சுமார் 3 அங்குல அளவிற்குத் தேங்கி நிற்கிறது. இதனால் கழிவுநீரில் பாசிகள் பிடித்து, லட்சக்கணக்கான கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் வாழும் முதியவர்கள் தோல் நோய்களாலும், குழந்தைகள் டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற தொற்றுநோய்கள் மற்றும் வைரஸ் காய்ச்சலாலும் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

​மேலும், இந்த கழிவுநீர் குடியிருப்போடு நிற்காமல், ஒரகடம் – படப்பை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு அரை கிலோ மீட்டர் தூரத்திற்குப் பாய்ந்து ஓடுவதால், அப் பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சுகாதாரச் சீர்கேட்டிற்கு ஆளாகியுள்ளனர்.

​இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகம் , வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

​இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பகுதி மக்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு அளித்தனர். அதில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் பின்பற்றப்படும் கழிவுநீர் வெளியேற்ற நடைமுறையைப் பின்பற்றி, தங்கள் பகுதிக்கு உடனடியாகக் கழிவுநீர் வாய்க்கால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
நாங்க பல லட்சம் செலவு பண்ணி வீடு வாங்கியும், கழிவுநீருக்கு நடுவுலதான் வாழ வேண்டியிருக்கு. சின்னக் குழந்தைகளுக்கு காய்ச்சலும், தோல் நோயும் வந்துட்டே இருக்கு. ரோடு முழுக்க கழிவுநீர் போகுது. ஆட்சியர் ஐயா உடனடியாக தலையிட்டு எங்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தித் தரணும் என அருண் எக்ஸெல்லோ கட்டிய அடுக்குமாடி குடியிருப்பில் புலம்பினார்.

கோடிகளைக் குவித்து விளம்பரம் செய்யும் பிரபல கட்டுமான நிறுவனம், மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கியுள்ள இந்த விவகாரத்தில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுகாதார சீர்கேட்டில் இருந்து அந்த மக்களை காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed