காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் VRS என்ற இரண்டு நவீன அரிசி ஆலைகளை நடத்தி வருபவர் ரவி, இவரது 30 வயது மகன் சுரேந்தரனும் அரிசி ஆலையை தனது தந்தையுடன் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் , தன் தந்தைக்கு மதிய உணவு வாங்குவதற்காக ரைஸ்மில் ஊழியர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் விநாயகபுரம் சென்று உணவு வாங்கி கொண்டு ரைஸ் மில் நோக்கி சென்று கொண்டிருந்த போது,

அவர்களை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், திடீரென காரை நிறுத்தி, சுரேந்திரனை வலுக்கட்டாயமாகக் காரில் இழுத்துப் போட்டுக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்தி சென்றனர்.
அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக ரவிக்குத் தகவல் தெரிவிக்க, பதறியடித்த ரவி பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்ற பாலுசெட்டிசத்திரம் காவல்துறையினர், உடனடியாக மாவட்டம் முழுவதும் உள்ள செக்போஸ்டுகளுக்கு எச்சரிக்கை விடுத்து, தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு வளையம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடத்தல்காரர்கள் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியில் ஒரு தோப்பில் பதுங்கியிருந்த போது காவல்துறையினரிடம் சிக்கினர்.
கடத்தல்காரர்கள் இரண்டு மணி நேரத்தில் சுற்றி வளைப்பு, கடத்தப்பட்ட சுரேந்தரன் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தான கிருஷ்ணன் (வயது34), தமிழ்மணி(23), ராகுல்(23) மற்றும் 2சிறார்கள் என 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு பெருநகர் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் நேரில் விசாரணை மேற்கொண்டார்.



50 லட்சம் ரூபாய் கேட்டு சுரேந்திரன் என்பவரை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் புகைப்படங்கள் ;
முதல் கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட சந்தான கிருஷ்ணன் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவை சேர்ந்தவர் என்றும் , இவர் ஏற்கனவே ரைஸ் மில் வைத்து நஷ்டம் அடைந்த காரணத்தினால் கோடீஸ்வரரான ரவியின் மகனை கடத்தினால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில், சுரேந்திரனை கடத்தி, 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டுதாகவும் கூறப்படுகிறது . மேலும், இது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் ரைஸ்மில் உரிமையாளர் மகன் கடத்தப்பட்டு, காவல்துறையினரின் சுறுசுறுப்பான நடவடிக்கையால் இரண்டு மணி நேரங்களிலேயே மீட்கப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதன்பின் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் எதிரொலி / 8939476777
