மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பெரியார் பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், திருமங்கலம், வாடிப்பட்டி, உசிலம்பட்டி போன்ற பகுதிகளுக்கும் சோழவந்தானிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
முக்கியமாக சோழவந்தானிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளில் 60 சதவீதத்திற்கும் மேல் மதுரை திருமங்கலம் செக்கானூரணி போக்குவரத்து பணிமனையில் இருந்தே இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகள் இல்லாதது பேருந்து பற்றாக்குறை ஆகிய காரணங்களால் சோழவந்தானின் பல்வேறு பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது.


இது குறித்து, பயணிகள் பலமுறை புகார் அளித்தும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் பணியாளர்கள் பற்றாக்குறையால் தற்போது சோழவந்தான் பேருந்து நிலையத்தில் பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அவலம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சோழவந்தானிலிருந்து வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தால் கூட தங்கள் பகுதிக்கு சென்று விடலாம் என்ற நம்பிக்கையும் தற்போது இல்லாமல் போய்விட்டதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சோழவந்தான் போக்குவரத்து பணிமனையில் சமீபகாலம் வரை நிறுத்தி மதிய நேரத்தில் பணியாளர்கள் ஷிப்ட் முடிந்து அடுத்த பணியாளர்கள் வரும்போது போக்குவரத்து பணிமனைக்கு சென்று தங்களது பேருந்துகளை எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்தது.


தற்போது இந்த நடைமுறையை மாற்றி ஷிப்ட் முடிந்து வீட்டிற்கு செல்லும் பணியாளர்கள் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்தி விட்டுச் செல்லுமாறு அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக காலையில் பேருந்தை எடுக்கும் பணியாளர்கள் மதியம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள் மதியத்திற்கு மேல் பேருந்தை இயக்குவதற்கு வரக்கூடிய பணியாளர்கள் வராத நிலையிலும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாகவும் பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இதன் காரணமாக சோழவந்தான் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் பேருந்து நிலையத்திற்கு வெளியில் பேருந்துகளை நிறுத்தி வைக்க கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆகையால் அனைத்து பேருந்துகளையும் பேருந்து நிலையத்திற்குள் நிறுத்துவதற்கு ஏற்றவாறு பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் மொத்தமாக பேருந்தை நிறுத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் பணியாளர்கள் பற்றாக்குறையா அல்லது அதிகாரிகளின் திட்டமிட்ட செயலா எனவும் பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.


எது எப்படி இருந்தாலும் பொதுமக்கள் மற்றும் பயணிகளை சிரமத்திற்கு உள்ளாக்காமல் பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்து செல்ல வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டுமென போக்குவரத்து துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777
