திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வேலம்மாள் போதி குழுமப் பள்ளிகள், இந்திய இளைஞர் ஐக்கிய மன்றம் (Youth United Council of India – YUCI)உடன் இணைந்து, “Rising United Nations Red Card Campaign” என்ற உலகளாவிய சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக உலகச் சாதனை முயற்சியை மேற்கொண்டது.
இந்த மாபெரும் முயற்சியில், வேலம்மாள் போதி குழுமத்தின் 10-க்கும் மேற்பட்ட வளாகங்களை சேர்ந்த 7,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்று, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக தங்களது ஒற்றுமைக் குரலை உலகிற்கு எடுத்துரைத்தனர்.

“ரெட் கார்டு இயக்கம்” என்பது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, அநீதி மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மனிதநேய இயக்கமாகும். இந்த இயக்கத்தின் மூலம் மாணவர்கள் உயர்த்தும் ரெட் கார்டு, பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கான உறுதியான ஆதரவின் அடையாளமாக அமையும்.
இந்த உலகச் சாதனை முயற்சிக்கு இந்திய இளைஞர் ஐக்கிய மன்றம் (YUCI) பெருமையுடன் ஆதரவாளராக (Sponsor) செயல்படுகிறது. இளம் தலைமுறையினரிடம் சமூகப் பொறுப்பு, தலைமைத்துவம் மற்றும் மனிதநேய மதிப்புகளை வளர்க்கும் உயரிய நோக்கத்துடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
கல்வி என்பது கல்வி அறிவை மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்புணர்வு, மனிதநேயம், சமத்துவ சிந்தனை மற்றும் நல்ல குடிமைப் பண்புகளையும் மாணவர்களிடம் விதைக்கும் விதத்தில் வேலம்மாள் போதி குழும பயணத்தில் இந்த உலகச் சாதனை முயற்சி மேலும் ஒரு மகத்தான மைல்கல்லாக அமைந்தது.

வேலம்மாள் போதி குழுமத்தின் தலைவர் மு.வே.முத்துராமலிங்கம், இயக்குநர் சசிகுமார் மற்றும் கல்வி இயக்குநர் கீதாஞ்சலி சசிகுமார், உலகச் சாதனை முயற்சியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினருக்கும் தங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். பெண்களின் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தும் இந்த வரலாற்று சிறப்புமிக்க முயற்சியில் பங்கேற்று சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழும் மாணவர்களை அவர்கள் மனதாரப் பாராட்டினர்.

செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777
