அரசு நேரடி நெல் கொள்முதல் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டு, அது அணைக்கப்பட்டதால், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நெல் மூட்டைகள் கருகாமல் பாதுகாக்கப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர்-மடவார் வளாகம் தென் பகுதியில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் உள்ளது. இம்மையத்தில், விவசாயிகளிடம் கோடைப்பருவத்தில் நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்ட 7,000 நெல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இம்மையத்திற்கு அருகே உள்ள குப்பைக் கிடங்கில் நேற்று மதியம் யாரோ ஒரு சமூக விரோதி, தீயை வைத்து விட்டதால், தீ மளமளவென பரவியது. ஆடி மாதக்காற்றில் தீ பரவி நாலா பக்கங்களிலும் நெருப்பு கொழுந்து விட்டு. எரிந்தது. இதைக்கண்ட பெரியகுளம் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கப் பொறுப்பாளர்கள் மோகன்ராஜ் மற்றும் வழக்கறிஞர் எஸ். ரமேஷ் ஆகியோர் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாகத் தகவல் தந்தனர்.

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையின் ஆய்வாளர் சுந்தரராஜன் மற்றும் முதுநிலை தீ அணைப்பு அலுவலர் சிவகுமார் ஆகியோர் கொண்ட படையினர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது கடும் வெயிலில் போராடி, தீயை அணைத்தனர். இதனால், கொள்முதல் மையத்தில் சேகரித்து, அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நெல் மூடைகள் தீயில் கருகாமல் தப்பித்தன. காட்டுத்தீ போல பரவிய நிலையிலும் அதை அணைத்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறை அலுவலர்களை விவசாயிகள் மற்றும் நெல் கொள்முதல் மைய அலுவலர்கள் பாராட்டினர்.

கடந்த பத்து நாட்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி, இராஜபாளையம் சேமிப்புக் கிட்டங்கிக்கு கொண்டு செல்லாமல் மையத்திலேயே இருப்பு வைத்தது தவறு என்று விவசாயிகள் கருத்துத் தெரிவித்தனர்.

செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed