“யாரிடம் போய் கேட்பது” என்று தெரியாத நிலையில் விழி பிதுங்கி நிற்கும் பெண்கள், புதிய அரசுக்கு ஏன் வாக்களித்தோம் என கொந்தளிப்பு…

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி சத்தியமூர்த்தி நகர் வடக்கு தெரு பகுதியில் 30 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை எனக் கூறி பெண்கள் வீடுகளுக்கு முன்பு காலி குடங்களை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பகுதியில், சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பரவை பேரூராட்சி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், குடிநீர் வழங்கக்கூடிய மோட்டார் பழுதாகி விட்டதால், கடந்த 30 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை என இந்தப் பகுதி பெண்கள் கூறுகின்றனர்.

மோட்டாரை சரி செய்வதற்கு பேரூராட்சி அதிகாரியிடம் கூறினால் இன்று நாளை என சாக்குப் போக்கு கூறி அலை கழிப்பதாக கூறுகின்றனர். பழுதான குடிநீர் மோட்டாரை சரி செய்ய அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை எனக் கூறுகின்றனர். பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று கேட்டால், பேரூராட்சியில் பணம் இல்லை அதனால் தான் தாமதமாகிறது. என கூறுவதாக கூறும் பெண்கள் குடிநீருக்கு வரி கட்டுகிறோம் வீட்டுக்கு வரி கட்டுகிறோம் இந்த பணத்தை பேரூராட்சி அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் ? பழுதான மோட்டாரை நாங்களா சரி செய்ய முடியும் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், தங்கள் பகுதியில் இருந்த அடிகுழாயும் சேதமடைந்து விட்டதால் அதிலிருந்தும் தண்ணீர் நின்று விட்டது. இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. தினசரி அரை மணி நேரம் மட்டும் பழுதான மோட்டார் மூலம் குடிதண்ணீர் வழங்குவதால் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் குடும்பத்திற்கு ஒரு குடம் தண்ணீர் கிடைப்பதே சிரமமாக உள்ளது.

இந்த நிலையில், குடிதண்ணீரை குடம் ரூபாய் 15 கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தினசரி 10 குடங்களுக்கு மேல் வாங்க வேண்டி உள்ளதால், 100 முதல் 150 ரூபாய் வரை செலவாகி விடுகிறது. இதன் காரணமாக அன்றாட வேலைகளுக்கும் செல்ல முடியவில்லை. குடிதண்ணீர் கொண்டு வரக்கூடிய வாகனம் எப்போது வரும் என காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டு நாட்களில் குடிதண்ணீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால், மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் மறியல் செய்வதை தவிர வேறு வழியில்லை என கூறுகின்றனர். ஒரு மாதம் இரண்டு மாதம் என தற்போது குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். வீட்டில் உள்ளவர்களிடம் குழாயில் தண்ணீர் வருவது இல்லை என கேட்டால் வந்துவிடும் என பதில் சொல்கிறார்கள். எங்கு போய் கேட்பது என்று எங்களுக்கும் தெரியவில்லை முதலில் கவுன்சிலர்கள் இருந்தார்கள் அவர்களிடம் போய் கேட்டோம் தற்போது அவர்களிடமும் கேட்க முடிவதில்லை. தற்போதுள்ள அரசுக்கு வாக்களித்தது தவறு என்று நினைக்கும் அளவிற்கு குடிநீர் பிரச்சினை எங்கள் பகுதியில் தலை விரித்து ஆடுகிறது. ஆகையால், அதிகாரிகள் உடனடியாக பரவை பேரூராட்சி சத்தியமூர்த்தி நகர் வடக்கு தெரு பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed