“கல்வி என்பது வாழ்க்கையை மாற்றும் சக்தி; போட்டித் தேர்வுக்கான சரியான வழிகாட்டுதல் அந்த மாற்றத்தை இன்னும் விரைவாகக் கொண்டுவரும்.” இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கிருஷ்ணாபுரம் பகுதியில் இயங்கி வரும், ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், டி.ஜே.எஸ் கல்வி குழுமம் மற்றும் ஸ்ரீதேவி கல்வி குழுமத்துடனும் இணைந்து, மக்கள் நல பணி இயக்க அறக்கட்டளை நடத்தி வரும், MNP ஏகலைவன் கட்டணமில்லா TNPSC பயிற்சி மையம், கடந்த சில ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை கனவிற்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது.
சேவையை நோக்கமாகக் கொண்ட பயிற்சி நிறுவனம் :
MNP ஏகலைவன் கட்டணமில்லா TNPSC பயிற்சி நிறுவனம் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, இந்த நிறுவனம் ஒரு வணிக நோக்கமுள்ள பயிற்சி மையமாக அல்லாமல், சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் சேவை அமைப்பாக தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறது.

இந்தப் பயிற்சி மையத்தின் முதன்மை நோக்கம், பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய, திறமையும் சேவை மனப்பான்மையும் கொண்ட மாணவ, மாணவியர்களை அரசு நிர்வாகத்தில் உயர்ந்த பொறுப்புகளுக்குத் தயார்படுத்துவது ஆகும்.
ஒரு நல்ல அரசு அதிகாரி என்பது வெறும் அரசு ஊழியர் அல்ல; மக்களின் சிரமங்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்காகச் செயல்படும் சமூக மாற்றத்தின் கருவி. அந்த எண்ணத்தை மாணவர்களிடையே விதைப்பதே எங்களின் அடிப்படை நோக்கமாகும்.

கல்வியே சமூக முன்னேற்றத்தின் மிகப் பெரிய ஆயுதம் ;
சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான மிக வலிமையான கருவி கல்வி. அதிலும் குறிப்பாக, போட்டித் தேர்வுகள் மூலம் அரசு பணியில் சேர்வது தனிநபரின் வாழ்க்கையை மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையும் மாற்றும் சக்தி கொண்டது.
இந்த எண்ணத்தின் அடிப்படையிலேயே, கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான போட்டித் தேர்வுப் பயிற்சியை முற்றிலும் கட்டணமின்றி வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.

வகுப்புகள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் ;
இந்தப் பயிற்சி வகுப்புகள், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகிலுள்ள கிருஷ்ணபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகின்றன.
தற்போது வகுப்புகள்:
- சனி மற்றும் ஞாயிறு
- காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறுகின்றன.
இந்த நேர அமைப்பு, வேலை செய்பவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் குடும்பப் பொறுப்புகளை மேற்கொண்டு வரும் பெண்களுக்கும் பயிற்சியில் பங்கேற்கும் வசதியை உருவாக்குகிறது.

கட்டணம் இல்லாத பயிற்சி தரத்தில் எந்த சமரசமும் இல்லை;
“இலவசம் என்றால் தரம் குறைவாக இருக்கும்” என்ற எண்ணம் பலரிடம் இருக்கலாம். ஆனால் MNP ஏகலைவன் பயிற்சி மையம் அந்த எண்ணத்தை முறியடித்து வருகிறது.
கட்டணம் இல்லாத பயிற்சி வழங்கப்படுவதால் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யப்படுவதில்லை. மாறாக, தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு இணையான, பல இடங்களில் அதைவிட உயர்ந்த தரத்தில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
எங்களின் நோக்கம் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அல்ல; அரசு பணியில் வெற்றி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே.

ஏன் Group I தரத்தில் பயிற்சி?
பொதுவாக பல பயிற்சி மையங்கள் Group IV, Group II, Group IIA எனத் தனித்தனியாக பயிற்சி அளிக்கின்றன.
ஆனால் எங்களின் அணுகுமுறை வேறுபட்டது.
TNPSC Group I, Group II, Group IIA மற்றும் Group IV ஆகிய தேர்வுகளின் ஆரம்பநிலை (Preliminary Examination) பாடத்திட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் பொதுவானவை. அதேசமயம், ஆண்டுதோறும் கேள்வித்தாள்களின் தரமும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
எனவே, “Group IV எழுதுபவர் Group IV அளவிலேயே படிக்க வேண்டும்” என்ற எண்ணத்தை நாங்கள் ஏற்கவில்லை.
அதற்கு பதிலாக, Group I மற்றும் UPSC தரத்தில் பாடங்களை கற்பிக்கிறோம்.
இதன் மூலம் மாணவர்கள் எந்தத் தேர்வை எழுதினாலும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் திறனைப் பெறுகின்றனர். அவர்களின் இலக்கு சிறியதாக இல்லாமல், உயர்ந்த அரசு நிர்வாகப் பொறுப்புகளை நோக்கி அமைய வேண்டும் என்பதே எங்களின் கல்வித் தத்துவம்.

போட்டித் தேர்வில் அறிவு மட்டும் போதாது; அனுபவமும் அவசியம்
பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றால் போதும்.
ஆனால் போட்டித் தேர்வுகளில் நிலைமை வேறுபட்டது.
இங்கு வேலை கிடைக்கும் அளவுக்கு மதிப்பெண் பெற வேண்டும். அதற்காகப் பாடங்களைப் படிப்பதோடு மட்டுமல்லாமல், தேர்வு அறையில் நேர மேலாண்மை, மனஅழுத்தத்தைக் கையாளும் திறன், கேள்விகளை அணுகும் முறை போன்ற அனுபவங்களும் மிக முக்கியமானவை.
இந்த அனுபவம் புத்தகங்களில் கிடைக்காது; தொடர்ந்து தேர்வுகளை எழுதுவதன் மூலமே கிடைக்கும்.

அதனால் தான், மாணவ – மாணவிகள் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு அல்ல, கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கும் காலத்திலேயே போட்டி தேர்வு தயாரிப்பை தொடங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இளம் வயதிலேயே தொடங்குங்கள்
18 வயது நிறைவடைந்து, தேவையான கல்வித் தகுதியைப் பெற்றவர்கள் Group IV போன்ற தேர்வுகளை எழுதத் தொடங்கலாம்.
இந்த ஆரம்ப அனுபவம், பின்னர் Group II மற்றும் Group I போன்ற உயர்நிலைத் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வலுவான அடித்தளமாக அமைகிறது.
21 அல்லது 22 வயதிலேயே உயர்நிலை அரசுப் பணியில் சேரும் ஒருவர், தனது பணிக்காலத்தில் பல பதவி உயர்வுகளைப் பெற்று, மாநில நிர்வாகத்தின் மிக உயர்ந்த பொறுப்புகளையும் அடையும் வாய்ப்பு உள்ளது.
எனவே, “எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறோமோ, அவ்வளவு விரைவாக வெற்றியை அடையலாம்” என்பதே எங்கள் மாணவர்களுக்கு வழங்கும் முக்கியமான செய்தியாகும்.


பெண்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை ;
இந்தப் பயிற்சி மையத்தின் மிகப்பெரிய சிறப்புகளில் ஒன்று, பெண்களின் அதிக பங்கேற்பாகும்.
சராசரியாக பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்களில் திருமணமான பெண்கள், குடும்பப் பொறுப்புகளைச் சுமந்து கொண்டிருப்பவர்கள், குழந்தைகளை வளர்த்து வரும் தாய்மார்கள் எனப் பலர் உள்ளனர்.
சில பெண்கள் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வர முடியாத சூழலில் இருப்பதால், வகுப்பை பாதிக்காத வகையில் சிறு குழந்தைகளுடன் வரவும் அனுமதி வழங்கப்படுகிறது. இது ஒரு விதிமுறை தளர்வு அல்ல; கல்வி வாய்ப்பை இழக்கக் கூடாத பெண்களுக்கு வழங்கப்படும் சமூக ஆதரவாகும்.
வயதும் ஒரு தடையல்ல. ஐம்பது வயதைக் கடந்த பெண்கள்கூட போட்டித் தேர்வுக்குத் தயாராக இந்தப் பயிற்சி மையத்தில் இணைந்திருப்பது, கல்விக்கும் கனவுகளுக்கும் வயது வரம்பு இல்லை என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

வெற்றியை நிரூபித்த எங்கள் வெற்றியாளர்கள் ;
இந்தப் பயிற்சி மையத்தில் பயின்ற பல மாணவர்கள் இன்று அரசு பணியில் உள்ளனர்; மேலும் பலர் அடுத்தகட்டத் தேர்வுகளுக்குத் தயாராகி வருகின்றனர்.
முன்னாள் மாணவி சாருமதி, Group IV தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு கைத்தறித் துறையில் Steno-Typist ஆகப் பணியைத் தொடங்கினார். பின்னர் Group IIA தேர்விலும் வெற்றி பெற்று, தற்போது தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உயர்ந்த பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.
மற்றொரு மாணவி ரேகா, திருமணமானவரும் இரண்டு குழந்தைகளின் தாயும் ஆவார். குடும்பப் பொறுப்புகளுடன் போட்டித் தேர்வுக்குத் தயாராகி, TRB தேர்வில் வெற்றி பெற்று தற்போது திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.


அதேபோல், எங்கள் மாணவி பிரியதர்ஷினி, TNUSRB காவலர் தேர்வின் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று, பின்னர் உதவி ஆய்வாளர் (Sub-Inspector) தேர்விலும் பங்கேற்றுள்ளார். அதன் இறுதி முடிவை ஆவலுடன் எதிர்நோக்கி வருகிறார்.
மேலும், எங்கள் பயிற்சி மையம் நேரடியாக TET பயிற்சி வழங்காதபோதும், எங்களிடம் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் TET Paper I மற்றும் Paper II தேர்வுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இது எங்கள் கற்பித்தல் முறையின் தரத்திற்கான மற்றொரு சான்றாகும்.
ஆசிரியர் குழு
இந்த பயிற்சி மையத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக பயிற்சி வழங்கி வருபவர் கோகுல்நாத்.
மேலும், இந்தப் பயிற்சி மையத்தில் பயின்று அரசு பணியில் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் அரசு பணியில் உள்ள சில அதிகாரிகளும், போட்டி தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்க கடிய சில அனுபவும் மிக்க இளைஞர்கள் மற்றும் மாணவ – மாணவிகளும், பொறுப்புணர்வுடன் தன்னார்வ ஆசிரியர்களாக வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.


இது ஒரு பயிற்சி மையம் மட்டுமல்ல; வெற்றி பெற்றவர்கள் அடுத்த தலைமுறையை உருவாக்கும் அறிவுப் பரிமாற்றக் குடும்பமாகவும் திகழ்கிறது.
ஒரு அழைப்பு…
நீங்கள் பன்னிரண்டாம் வகுப்பை முடித்தவராக இருந்தாலும், கல்லூரியில் படித்து கொண்டிருப்பவராக இருந்தாலும், பட்டப்படிப்பை முடித்தவராக இருந்தாலும், உங்கள் கனவு அரசு வேலை என்றால் இன்று முதல் படிக்க தொடங்குங்கள்.
போட்டி தேர்வுக்கான தயாரிப்பை நாளைக்கு தள்ளிப் போடாதீர்கள். இன்று தொடங்கும் ஒரு சிறிய முயற்சி, நாளைய உயர்ந்த அரசு அதிகாரியாக உங்களை உருவாக்கக்கூடும்.
உங்கள் வெற்றி உங்கள் குடும்பத்தின் பெருமையாகவும், சமூகத்தின் முன்னேற்றமாகவும், தமிழகத்தின் வளர்ச்சியாகவும் மாறட்டும்.

டி.என்.பி.எஸ்.சி வெற்றி பயணத்தில் உங்களுடன் பயணிப்பதற்கு தயாராக உள்ளது MNP ஏகலைவன் கட்டணமில்லா TNPSC பயிற்சி மையம்
பயிற்சி மையம் குறித்த விவரங்களுக்கு ; ஒருங்கிணைப்பாளர்: P.G.பாலகிருஷ்ணன்
அலைபேசி: 8939476777

கட்டுரை – பயிற்சி ஆசிரியர் கோகுல்ராஜூ
