மாணவிகளின் சுகாதாரத்தில் அலட்சியமாக இருக்கும் தென்னேரி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் வேண்டுகோள்.


காஞ்சிபுரம் மாவட்டம் தென்னேரி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது . இந்த பள்ளியில் மேல்நிலைப் வகுப்புகளில் மட்டும் சுமார் 110-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த மாணவிகளின் பயன்பாட்டிற்காக, நபார்டு திட்டத்தின் கீழ் ‘சுடர்’ என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம், 7 புதிய நவீன சிறுநீர் கழிவறைகள் மற்றும் ஆசிரியைகளுக்கான பிரத்யேக கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டன.

ஆனால், இந்த புதிய கழிவறைகள் பயன்பாட்டிற்கு வந்ததில் இருந்தே, அங்குள்ள 7 கழிவறைகளில் வெறும் 3 கழிவறைகளை மட்டுமே மாணவிகளின் பயன்பாட்டிற்கு திறந்துவிட்டு, மீதமுள்ள 4 புதிய கழிவறைகளை கடந்த ஓராண்டு காலமாக தலைமை ஆசிரியை பூட்டி வைத்துள்ளதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

​இதன் காரணமாக, இடைவேளை மற்றும் பாடங்கள் நடத்தும் நேரங்களில் 110 மாணவிகளும் வெறும் 3 கழிவறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டியுள்ளதால், நீண்ட வரிசையில் நின்று கழிவறை செல்ல தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஆசிரியைகளுக்காக கட்டப்பட்ட புதிய கழிவறையும் பூட்டப்பட்டுக் கிடப்பதால், அவர்களும் பழைய உடைந்த கழிவறையையே பயன்படுத்தும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மாணவிகளின் சுகாதாரத்தைப் பேண வேண்டிய தலைமை ஆசிரியரே, கழிவறைகளைப் பூட்டி வைத்து மாணவிகளை சித்ரவதை செய்வது ஏன்? என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த பூட்டப்பட்ட கழிவறைகள் உடனடியாகத் திறக்கப்பட்டு மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும், அலட்சியமாகச் செயல்பட்ட தலைமை ஆசிரியை மீது கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன். எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed