15 தீயணைப்பு வாகனங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.


காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் கார் நிறுவனத்தில் சுமார் 5000 தொழிலாளர்கள் மூன்று ஷிப்டுகளில் பணியாற்றி வருகின்றனர்.மூன்று பிரிவுகளாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கமான உற்பத்திப் பணிகள் நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் மட்டும் நடைபெற்று வந்த நிலையில், 319 பணியாளர்கள் மட்டுமே பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஹூண்டாய் கார்களுக்கு தேவையான, கார் ஆடியோ சிஸ்டம், ஏர்பேக், ஸ்டீயரிங் மற்றும் பிரேக் உள்ளிட்ட முக்கிய வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் ஹூண்டாய் மோபிஸ் (Hyundai Mobis) நிறுவனத்தில் இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் தொழிற்சாலையின் இன்ஃபோடெயின்மென்ட் அசெம்ப்ளி (Infotainment Assembly) பிரிவில் செயல்பட்டு வந்த “வேவ் சோல்டரிங்” (Wave Soldering) இயந்திரத்தில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் இயந்திரத்தில் இருந்து புகை வெளியேறி, பின்னர் அது எக்ஸாஸ்ட் அமைப்பு வழியாக வெளிப்பட்டது. ஆனால், சில நிமிடங்களிலேயே தீ வேகமாக பரவியதால் தொழிற்சாலை வளாகம் முழுவதும் அடர்த்தியான கரும்புகை சூழ்ந்தது. வெப்பச்சலனம் காரணமாக புகை மற்றும் தீ பரவல் அதிகரித்து, தொழிற்சாலையின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நிர்வாகம் உடனடியாக அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பணியில் இருந்த அனைத்து தொழிலாளர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றியது. இதனால் பெரும் உயிர்ச்சேதம் மற்றும் காயங்கள் தவிர்க்கப்பட்டன. இந்த தீ விபத்தில் உயிரிழப்பு அல்லது காயமடைந்தவர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தகவலறிந்ததும் ஹூண்டாய் மோபிஸ் நிறுவனத்தின் தீயணைப்பு வாகனமும், சிப்காட் தீயணைப்பு வாகனமும் பிற்பகல் 3.20 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்து, நிறுவனத்தின் அவசரகால மீட்புக் குழுவினருடன் இணைந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டன. மேலும் தீயின் தீவிரம் அதிகரித்ததைத் தொடர்ந்து சால்காம் டைம்லர் , ரெனால்ட் , போஷ் , செவோன் உள்ளிட்ட அருகிலுள்ள தொழிற்சாலைகளிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மொத்தம் 15 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சியால் மாலை 5.37 மணியளவில் சுமார் 80 சதவீத தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், சுமார் 26,517 சதுர மீட்டர் பரப்பளவிலான தொழிற்சாலை வளாகம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

தீ விபத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பின் மதிப்பு பல கோடி ரூபாயை எட்டக்கூடும் என கூறப்படுகிறது. தீ விபத்திற்கான துல்லியமான காரணம் மற்றும் சேத மதிப்பீடு குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் நிகழ்ந்த இந்த மிகப்பெரிய தீ விபத்து, தொழிற்சாலை பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அவசரகால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

செய்திகள் ; லோட்டஸ் லட்சுமிகாந்தன்.இ / காஞ்சிபுரம்
94875 48077 / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed