திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாலுகா மன்னார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆ.முத்துக்குட்டி.
இவர் காவல்கிணறு கிராம ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வரும் படப்பார்குளம் எஸ்.பாலகிருஷ்ணன் மீது, அரசு ஒப்பந்ததாரர் மன்னார்புரம் ஆ.முத்துக்குட்டி, என்பவர் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
அதில் கூறி இருப்பதாவது:
நான் நெல்லை மாவட்டம் நாங்குநேரி யூனியனில் 2019- 2020ல் அரசு ஒப்பந்தப் பணி மேற்கொண்ட போது, தற்போது காவல்கிணறு ஊராட்சி செயலாளராக பணியாற்றி வரும் எதிர்மனுதாரர் பாலகிருஷ்ணன் எனக்கு வர வேண்டிய அரசு ஒப்பந்தப் பணம், ரூபாய் 6 லட்சத்து 11 ஆயிரத்து 834 யை தனது வங்கி கணக்கில் வரவு வைத்து மோசடி செய்தார்.
இது தொடர்பாக அரசுத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் எனது பணத்தை மோசடி செய்ததை உறுதி செய்துள்ளனர். மேலும், துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எதிர்மனுதாரர் பாலகிருஷ்ணன், கடந்த 06.08.2016 அன்று என்னிடமிருந்து ரூபாய் 30 ஆயிரத்திற்கான காசோலையைப் பெற்று அந்த காசோலை தொலைந்து விட்டது என என்னிடம் கூறிவிட்டு, அந்த காசோலையை ரூபாய் 7,30,000 என திருத்தம் செய்து, எனது பணத்தை மேலும் மோசடி செய்ய முயற்சி செய்து வருகிறார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கிக்கும் நான் புகார் அளித்துள்ளேன்.

எனவே, எனக்கு வரவேண்டிய அரசு ஒப்பந்தப் பணிக்கான பணம் ரூ. 6,11,834 யை மோசடி செய்ததுடன், ரூ. 30 ஆயிரத்திற்கு நான் கொடுத்த காசோலையை ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் என திருத்தம் செய்து மேலும் எனது பணத்தை மோசடி செய்ய முயற்சி மேற்கொண்ட காவல்கிணறு ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அரசு ஒப்பந்ததாரர் மன்னார்புரம் ஆ.முத்துக்குட்டி, திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக திசையன்விளை காவல் நிலைய ஆய்வாளர் எழில் சுரேஷ் சிங், காவல்கிணறு ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் மீது போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததாக BNS 318(4), 338 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து (எஃப்.ஐ.ஆர். எண். 1126/2026) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
செய்தியாளர் : செ.பா.தவசிக்கனி
எதிரொலி / நெல்லை மாவட்டம்.
