
திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியை சேர்ந்த செஞ்சி அம்மன் நகர்,கருங்காலி உள்ளிட்ட பழங்குடி கிராமத்தில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம்,ஹைதராபாத்தில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிஷாமாபாத் மாவட்டம்,ஹார்மோன் மண்டலம்,மகுடி கிராமத்தில் உள்ள கிரண் என்பது சொந்தமான செங்கல் சூளையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.
இங்கு ஆந்திரா, கூடூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து 513 தொழிலாளர்கள் பணி செய்த நிலையில் தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே உள்ள பழங்குடி கிராமங்களில் இருந்து பெரியவர்கள் 17 பேரும் குழந்தைகள் 13 பேரும் என மொத்தம் 30 பேர் கொத்தடிமை பணியாளர்களாக பணி செய்து வந்துள்ளனர்.
சரியான உணவு, தங்குமிடம்,கூலிக்கு அதிகமான வேலை வாங்குதல், குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துதல், பணியாளர்களை அவதூறாக பேசுதல், கீழ்த்தரமாக நடத்துதல் உள்ளிட்ட செயல்களில் செங்கல் சூளை உரிமையாளர் கிரண் நடந்து கொண்டதால், தொழிலாளர்களில் ஒருவரான பாபு என்பவர் அளித்த தகவலின் பெயரில் தெலுங்கானா காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அவர்களை மீட்டுள்ளனர். பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மட்டும் தெலுங்கானா அரசு பேருந்து மூலம் 19 மணி நேரம் பயணித்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து சேர்த்தனர்.

அதன் பின் பொன்னேரி சாராட்சியர் அப்துல் ராசிக் அவர்களின் உத்தரவின் பேரில், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொன்னேரி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார் பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம் திருப்பாலைவனம் வருவாய் ஆய்வாளர் பிரேம்நாத், கருங்காலி கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன், பொன்னேரி மற்றும் திருப்பாலைவனம் காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களை மீட்டு மதிய உணவு கொடுத்து தங்கள் சொந்த ஊர்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.

செய்திகள் : பழவை முத்து எதிரொலி / 8939476777
