கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் தாலுகாவில் தினகரன் மற்றும் தினமலர் நாளிதழ்களில் செய்தியாளராக தோழர் N.அன்பரசு அவர்கள், பணியாற்றி வந்துள்ளார். நேற்று முன்தினம் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

முதல்கட்டமாக கிருஷ்ணகிரியிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட தோழர் N.அன்பரசு, சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்துள்ளார். இந்த சம்பவம், அவரது குடும்பத்தினரையும், சக செய்தியாளர்களையும் மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் இந்த பெரும் துயரத்திலும், தோழர் அன்பரசின் குடும்பத்தினர், அவரது இறுதி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் மூலம் 5 க்கும் மேற்பட்டோர் மறுவாழ்வு அடைய உள்ளனர் என்ற செய்தி அறிந்து சக செய்தியாளர்கள் அனைவருமே பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறோம்.

தமிழ்நாடு அரசு அவரது உடலுக்கு அரசு மரியாதை வழங்க உள்ளதை, கிருஷ்ணகிரி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் உட்பட அனைத்து பத்திரிகையாளர்களும், நன்றியுடன் நினைவு கொள்கிறோம் !

உடல் மற்றும் உடல் உறுப்புகள் தானத்தில் தமிழ்நாடு, நம் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது. இருப்பினும் இந்த சதவீதம் போதுமானதாக இல்லை என்ற நிதர்சனமான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது.

இத்தகைய சூழலில், அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என்ற விழிப்புணர்வு செய்தியை தனது மறைவுக்குப் பிறகும் இந்த உலகிற்கு வழங்கிச் சென்றுள்ள அன்பரசுவுவை எண்ணி பத்திரிகையாளர்கள் அனைவரும் பெருமிதம் கொள்கிறோம் !

இந்த நேரத்தில் தோழர் அன்பரசுவை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், சக செய்தியாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன் தமிழ்நாடு அரசு, தோழர் அன்பரசுவின் குடும்பத்தினருக்கு பத்திரிகையாளர் நலவாரியம் வாயிலாக வழங்க வேண்டிய பணப்பலன்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் !

தோழமையுடன்
டி.எஸ்.ஆர். சுபாஷ்
மாநில தலைவர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ( TUJ )

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed