சதுரகிரி மலையில் பழமை வாய்ந்த அன்னதான மடத்தில் இருந்த அன்னதான சமையல் பாத்திரங்கள் போர்வெல் மோட்டார்கள் திருடு போனது. இத்திருட்டில் ஈடுபட்டதாக கோயில் அறங்காவலர் மீது மடத்தின் நிர்வாகிகள் மதுரை எஸ்பி இடம் புகார் மனு அளித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இது பற்றிய விபரமாவது: சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களுக்கு இணையாக புகழ்பெற்றது அங்குள்ள கஞ்சிமடம். 1960ம் ஆண்டில் காளிமுத்து சுவாமிகள் என்பவரால் இந்த மடம் துவக்கப்பட்டது. மலையேறி வரும் பக்தர்களுக்கு பசிபோக்கும் நோக்கில் இங்கு கஞ்சி வழங்கப்பட்டது. எனவே அது “கஞ்சிமடம்” என பக்தர்களால் அழைக்கப்பட்டது. அவரது மறைவுக்குப் பிறகு அவரது சீடர்களால் தற்போது வரை 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இரவு பகல் என எந்த நேரமும் இங்கு வரும் பக்தர்களுக்கு பசியாற உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இம்மலையில் ஏராளமான அன்னதான மடங்கள் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அனைத்து மடங்களும் அரசு உத்தரவின் பேரில் மூடப்பட்டது. ஆனால் இந்த கஞ்சி மடத்திற்கு மட்டும் அன்னதானம் வழங்க உயர்நீதிமன்றம் சிறப்பு அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் தற்போது வரை இம்மலையில் அன்னதானம் வழங்கி வரும் ஒரே மடமாக இந்த மடம் விளங்கி வருகிறது.

பல்வேறு சிறப்பு பெற்ற இந்த மடத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பொருட்கள் திருடு போனதால் அன்னதானத்திற்கு இடையூறு ஏற்பட்டது. சிறு சிறு பொருட்கள்
திருடு போனதால் நிர்வாகிகள் போலீசில் புகார் எதுவும் செய்யவில்லை.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அங்கு சமையலுக்காக பயன்படுத்தப்படும் பெரிய பாத்திரங்கள் அனைத்தும் திருடு போனது. பின்னர் இரண்டு நாள் இடைவெளியில் மீண்டும் போர்வெல் மோட்டார் திருடப்பட்டது. இதனால் சமைக்க முடியாமல் போனது. 50 வருடங்களுக்கும் மேலாக இடைவிடாமல் நடந்து வந்த அன்னதானம் முற்றிலுமாக தடைப்பட்டது.

இதனால் நேற்று முன்தினம் கோயிலுக்கு ஆனி மாத அமாவாசைக்காக மலைக்கு வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இம்மடத்திற்கு வந்து உணவு இன்றி ஏமாற்றத்துடன் பசியோடு திரும்பிச் சென்றனர். இது மடத்தின் நிர்வாகிகள், பக்தர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது கோயிலின் அறங்காவலராக உள்ள ராஜா மற்றும் அவரது சகோதரர் சம்பத் ஆகியோர் தான் அடியாட்கள் மூலம் இந்த செயலை தொடர்ந்து செய்து வருவதாக கூறி மதுரை மாவட்ட எஸ்.பி, யை மடத்தின் சார்பில் பக்தர்கள் திரளாகச் சென்று சந்தித்து புகார் மனு அளித்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர், அறநிலையத்துறை அமைச்சர், முதல்வர் ஆகியோருக்கு தனித்தனியே புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து மடத்தின் நிர்வாகி தவமணி கூறுகையில்…

” இந்த அன்னதானமடம் செயல்படக்கூடாது என அறங்காவலர் அவரது தரப்பைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். அன்னதானத்திற்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் குடிநீர் இணைப்பை துண்டிப்பது சமையல் செய்ய பயன்படுத்தப்படும் பாத்திரங்களை தூக்கி வெளியில் வீசுவது அல்லது ஏதாவது புதர்களுக்குள் சென்று மறைத்து வைப்பது, சமையலுக்காக சேகரித்து வைத்திருக்கும் தண்ணீர் ட்ரம்களை கவிழ்த்து தண்ணீரை கீழே கொட்டி விடுவது என அவ்வப்போது ஏதாவது அராஜகம் செய்து வருகின்றனர். உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே அன்னதான மடம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இவர்கள் செய்யும் இந்த அராஜகம் நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகும். ஏழு கிலோமீட்டர் தூரம் மலையேறி வரும் பக்தர்கள் தங்கள் பசியைப் போக்க எங்கே போவார்கள். தன்னலம் இன்றி சேவை செய்யும் இந்த மடத்திற்கு இடையூறு செய்யும் நபர்கள் மீது அறநிலையத்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருட்டில் ஈடுபட்ட நபர்களுக்கு கடும் தண்டனை வழங்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னதானம் தொடர்ந்து நடக்க அரசு உதவ வேண்டும்” என்றார்.

செய்திகள் ; தேவதர்ஷினி எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed