ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பஸ் நிலையத்தில் பரமக்குடி வட்டத்திற்குட்பட்ட பிரண்டைகுளம் கிராமத்திற்கு மேலாய்க்குடி கிராமத்திற்கு புதிய , தடமாற்றம் செய்யப்பட்ட அரசு பேருந்து சேவைகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே.ராஜீவ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வி.கே.ராஜீவ் பேசியதாவது :

பொதுமக்களின் பயண வசதியை மேம்படுத்தும் வகையிலும், குறிப்பாக பள்ளி செல்லும் மாணவர், மாணவியர்கள் பயன்படும் வகையில், பார்த்திபனூரில் இருந்து தினமும் காலை 6.55 மணிக்கு புறப்பட்டு பரமக்குடி வரும் பேருந்தும், பரமக்குடியில் இருந்து தினமும் மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு பார்த்திபனூர் செல்லும் பேருந்தும் 06.07.2026- முதல் பிரண்டைகுளம் கிராமத்தைத் தொட்டு இயக்கப்படும்.

அதே போல், கமுதியில் இருந்து தினமும் காலை 5.50 மணிக்கும், மாலை 5.25 மணிக்கும் புறப்பட்டு பரமக்குடி வரும் பேருந்தும், பரமக்குடியில் இருந்து காலை 7.10 மணிக்கும், மாலை 6.40 மணிக்கும் புறப்பட்டு கமுதி செல்லும் பேருந்துகளும் மேலாய்க்குடி கிராமத்தின் வழியாக தடமாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட உள்ளன.
இந்த புதிய , தடமாற்றம் செய்யப்பட்ட பேருந்து சேவைகள் மூலம் பிரண்டைகுளம் , மேலாய்க்குடி கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், விவசாயிகள், பெண்கள், முதியோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதுகாப்பான, சீரான , வசதியான போக்குவரத்து சேவையைப் பெறுவார்கள்.

மேலும், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், வணிகம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக பரமக்குடி, கமுதி , பார்த்திபனூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு எளிதில் பயணம் மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் , மக்களின் தேவைகளை உடனுக்குடன் அறிந்து, அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசின் முயற்சியின் தொடர்ச்சியாக இப்புதிய பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இச்சேவைகள் கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்குவதோடு, அவர்களின் சமூக , பொருளாதார முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக அமையும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே.ராஜீவ் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் , காரைக்குடி மண்டல பொது மேலாளர், நிர்வாகம் துணை மேலாளர் , இயக்கம் உதவி மேலாளர், பரமக்குடி , கமுதி கிளை மேலாளர்கள், செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சாலி தளபதி, அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed