ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மீள்வளம் , மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் , உட்பொருத்தும் இயந்திரங்களை தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே.ராஜீவ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
2025-2026 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் , மாநில அரசுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மீன்பிடித் தொழிலின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், பாதுகாப்பான , விரைவான கடல்சார் பயணத்தை உறுதி செய்யவும் 40 சதவீதம் , 60 சதவீதம் மானிய விலையில் வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
இதன்படி, மொத்தம் 47 மீனவ பயனாளிகளுக்கு வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இதில் பொது பிரிவைச் சேர்ந்த 28 பேர், ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த 02 பேர் , மகளிர் பிரிவைச் சேர்ந்த 17 பேர் பயன்பெற்றுள்ளனர்.

இத்திட்டத்தின் மூலம் மொத்தம் ரூ.40.18 இலட்சம் மதிப்பீட்டில் வெளிப்பொருத்தும் இயந்திரங்கள், ரூ.21.90 இலட்சம் அரசின் மானியத்துடன், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இயந்திரம் கோகிலர் நிறுவனத்தின் வெளிப்பொருத்தும் இயந்திரமாகும். ஒவ்வொரு இயந்திரத்தின் விலை ரூ.85,500/- ஆகும். இதில் 40 சதவீத மானியமாக ரூ.34,200/- , 60 சதவீத மானியமாக ரூ.51,300/- அரசு வழங்குகிறது. இதன் மூலம் மீனவர்கள் குறைந்த செலவில் தரமான வெளிப்பொருத்தும் இயந்திரங்களைப் பெற்று, தங்களது மீர்பிடித் தொழிலை மேலும் திறம்பட மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இத்திட்டம் மூலம் பாரம்பரிய மீனவர்களின் பொருளாதார முன்னேற்றம், மீன்பிடித் திறன் உயர்வு, எரிபொருள் பயன்பாட்டில் செயல்திறன் , பாதுகாப்பான கடல் பயணம் ஆகியவை மேம்படுவதுடன், அவர்களது வாழ்வாதாரமும் நிலையான வளர்ச்சியை நோக்கி முன்னேறும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே. ராஜீவ் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் , மீன்வளம் , மீனவர் நலத்துறை துணை இயக்குநர் சின்னகுப்பன் , உதவி இயக்குநர்கள் இராஜேந்திரன் , நடராஜன் , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சாலி தளபதி உள்பட மீனவ பயனாளிகள் , அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777
