மதுப்பிரியர் ஒருவர் டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை எம்.ஆர்.பி. விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ஆத்தணஞ்சேரி சபரிஷ் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண் 4096-ல், ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, மதுப்பிரியர் ஒருவர் டாஸ்மாக் விற்பனையாளரிடம் கேள்வி எழுப்பியபோது, “எம்.ஆர்.பி. விலைக்கு மட்டுமே விற்க வேண்டும் என்று அரசு எங்களுக்கு தெரிவிக்கவில்லை” என்று அலட்சியமாக பதிலளிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, அரசு விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தது உறுதியானால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் எதிரொலி / 8939476777
