கிருஷ்ணகிரி அருகே உள்ள கும்மனூர் கிராமம் அருகே உள்ளது சின்னராகிமானப்பள்ளி. இங்கு 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக பொது வழி பிரச்சனை இருந்து வருவதையொட்டி அதே கிராமத்தை சேர்ந்த ராஜாமணி தரப்பினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வழக்கு தீர்ப்பின்படி, வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஆக்கிரமிப்புகளை அளந்து எல்லை நிர்ணயம் செய்தனர், ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை,

இந்த நிலையில் எதிர் தரப்பினர் நேற்று மாலை கிராமத்திற்கு செல்லும் பொதுவழியை ஏர் உழுது, கற்கள் குவித்து கிராம மக்கள், கிராமத்திற்கு செல்ல முடியாதவாறு தடுத்தனர். இது குறித்து காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் பொது வழிப் பாதையை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து, சாலையில் ஏற்படுத்திய தடுப்புக் கற்களை அகற்றினர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்தரப்பினரை எச்சரித்தனர்.
இந்நிலையில் இன்று கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதான செய்து, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பொதுவழி அமைத்து தருவதாக உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அதே கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கூறுகையில், எதிர்த்தரப்பினர் வேண்டுமென்றே பிரச்சனை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் பொது வழி பாதையில் கற்களை கொட்டி தடங்கலை ஏற்படுத்தினர், இதனால் இன்றைக்கு எங்கள் கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் யாரும் பள்ளி கல்லூரிக்கு செல்லவில்லை.

தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராமத்திற்கு பொது வழிப் பாதையை ஏற்படுத்தி தர வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தார்.
செய்திகள் ; மாருதி மனு எதிரொலி / 8939476777
