5ஆம் நாள் யாளி வாகன வீதியுலா ரத்து. பக்தர்கள் வேதனை...
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தேவராஜ பெருமாள் கோவிலின் வைகாசி பிரம்மோற்சவத்தில், ஐந்தாம் நாள் நடைபெற வேண்டிய யாளி வாகனம் வீதியுலா நடைபெறாமல் போனது பக்தர்களிடையே கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த மே 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த பத்து நாள் திருவிழாவில் காலை மற்றும் மாலை வேளைகளில் வரதராஜ பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.


அந்த வகையில், பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று வரத பெருமானுக்கு சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, இரவு சுமார் 9.30 மணியளவில் யாளி வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.
பக்தர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு நான்கு ராஜவீதிகளிலும் பெருமாளை தரிசிக்க காத்திருந்த நிலையில், கோவில் வெளிப்பிரகாரத்தில் தொடங்கிய வீதியுலா எதிர்பாராத விதமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், யாளி வாகனம் ராஜவீதிகளுக்குச் செல்லாமல் மீண்டும் கோவிலுக்கே திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதனால், வருடத்தில் ஒருமுறை மட்டுமே நடைபெறும் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான யாளி வாகன சேவையை தரிசிக்க காத்திருந்த பக்தர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
கோவில் நிர்வாகத்தின் திட்டமிடல் குறைபாடு மற்றும் அலட்சியமே இந்த நிலைக்கு காரணம் என பக்தர்கள் குற்றம்சாட்டினர்.
குறிப்பாக, இதே பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் சேஷ வாகன உற்சவத்தின்போதும், பெருமாளை சுமந்து வந்த தறி (கட்டை) முறிவு ஏற்பட்டதால் வீதியுலா முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தது. அந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், ஐந்தாம் நாளும் உற்சவம் பாதிக்கப்பட்டிருப்பது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக வரதராஜ பெருமாள் கோவிலின் வைகாசி பிரம்மோற்சவம் எந்தவித தடையும் இன்றி நடைபெறும் என்ற பெருமையை பெற்றுள்ளது. கனமழை, வெயில் உள்ளிட்ட இயற்கை சவால்களுக்கிடையிலும் உற்சவங்கள் முறைப்படி நடைபெற்ற வரலாறு கொண்ட இந்த கோவிலில், ஒரே பிரம்மோற்சவத்தில் இரண்டு முக்கிய உற்சவங்கள் பாதிக்கப்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

எனவே, மீதமுள்ள உற்சவ நாட்களாவது எந்தவித குறைபாடும் இல்லாமல் நடைபெற கோவில் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற அலட்சியங்கள் மீண்டும் நிகழாத வகையில் நிர்வாகம் உரிய திட்டமிடலுடன் செயல்பட வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லோட்டஸ் லட்சுமிகாந்தன்.இ காஞ்சிபுரம் / 94875 48077 எதிரொலி / 8939476777
