திருவள்ளூர் மாவட்டத்தில் பனை சார்ந்த தொழில்களை இந்த மாவட்ட மக்களுக்கு உருவாக்கி கொடுக்க வேண்டும் எனவும், அதனால் இந்த மாவட்டத்தில் கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு தற்சார்பு பொருளாதார வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்கள், முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 1,000 பெண்களுக்கு பனை ஓலையில் கைவினை பொருட்கள் செய்வதற்கு பயிற்சி வழங்க முயற்சி மேற்கொண்டார்.

அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர், ஜெயக்குமார் அவர்கள் பனை ஓலை பயிற்சி முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தன் மூலம், முதல் பயிற்சி முகாம் கடம்பத்தூரில் நேற்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்து, பயிற்சிக்கு வந்திருந்த பெண்களுக்கு பயிற்சி குறித்த அறிவுரைகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், பனை சார்ந்த தொழில்கள் பல உள்ளன, அதில் பெண்களுக்கான பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்யக்கூடிய தொழில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பயிற்சியை பெற்று நீங்கள் இந்த பொருட்களை தொடர்ந்து செய்து, நீங்கள் நிரந்தர வருவாய் பெறலாம், சென்னை போன்ற பெரு நகரங்களில் பிரியாணிகள் கூட பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டிகளில் வைத்துத்தான் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது, இந்த பொருட்களுக்கான தேவை அதிக அளவில் உள்ளது.

அதற்கேற்றார் போல், வருங்காலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, நீங்கள் செய்யும் பனை ஓலை பொருட்களை மக்கள் பயன்படுத்த செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நீங்கள் தொடர்ந்து இந்த பயிற்சி வகுப்பிற்கு வந்து பயிற்சியை பெற்று நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குழுவாக உருவாகி, அனைவரும் சுயமாக வருவாய் பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம், என கூறினார்.

மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மத்திய பனைப் பொருள் மற்றும் பனைபொருள் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பிரபாகர் ஆகியோர் உரையாற்றினர். மேலும், இந்நிகழ்ச்சியில் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி, பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், பயிற்சி ஆசிரியர்கள் சரஸ்வதி, வனிதா, உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக, ஊராட்சி செயலாளர் பிரகாசம் நன்றி கூறினார்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed