விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தளவாய்புரம் அருகே அமைந்துள்ள புத்தூர் மலையின் பின்புற மலையடிவாரத்தில், கட்டில் பாறை கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. அதன் அருகே கற்காலத்தைச் சேர்ந்த மூன்று மனித வாழ்விடங்களும், சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான வெண்சாந்து பாறை ஓவியங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
அதே ஊரைச் சேர்ந்த இராம்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், இராம்கோ பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் பொ. பிரேம் மற்றும் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர்
முனைவர் போ. கந்தசாமி ஆகியோர் இணைந்து இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, கட்டில் பாறை கருப்பசாமி கோயிலுக்கு அருகே இயற்கையாக அமைந்துள்ள மூன்று கற்கால மனிதர்கள் வாழ்ந்த கற்குகைகள் மற்றும் குகை விதானப்பகுதி ஒன்றில் 3,000 ஆண்டுகள் பழமையான வெண்சாந்து கொண்டு வரையப்பட்ட பாறை ஓவியங்களையும் கண்டறிந்தனர்.

இதுகுறித்து கள ஆய்வாளர்கள் கூறுகையில், பழங்காலத்தில் இயற்கையாக அமைந்துள்ள குகைத்தலங்களை மனிதர்கள் தங்கும் உறைவிடங்களாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். அதன் காரணமாகவே இப்பகுதிக்கு ‘கட்டில் பாறை’ என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
கோவிலைச் சுற்றியுள்ள பகுதியில் பல இயற்கையான பாறை ஒதுக்கிடங்கள் காணப்பட்டாலும், கண்டறியப்பட்ட இந்த மூன்று குகை அமைப்புகளில் மட்டுமே மழைநீர் உள்ளே கசியாத வகையில் இயற்கையான அமைப்பு கொண்டு காணப்படுகிறது. மேலும், இக்குகைத் தளங்களில் அரைப்பு தேய்ப்புக் குழிகளும் காணப்படுகின்றன. இத்தகைய சான்றுகளின் அடிப்படையில், இவை அக்கால மனிதர்களின் வாழ்விடங்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பாறை ஓவியங்கள்:
இயற்கையாக அமைந்துள்ள ஒரு குகை தளத்தின் விதானப் பகுதியில் வெண்சாந்து கொண்டு வரையப்பட்ட பாறை ஓவியங்களில் மனிதர்களின் போர்க்காட்சிகள், அக்கால மனிதர்கள் வாழ்ந்த சூழலில் கண்ட விலங்குகளின் உருவங்கள், வாள் மற்றும் கேடயம் போன்ற ஆயுதங்களின் உருவங்கள் ஆகியவை வரையப்பட்டுள்ளன. இவ்வோவியங்கள் அக்கால மனிதர்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான தொல்லியல் சான்றுகளாக விளங்குகின்றன.
எனவே கட்டில் பாறை கருப்பசாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலுக்கு அருகிலேயே அடுப்பு மூட்டிச் சமைப்பதால், குகைத் தளத்தில் உள்ள பழமையான ஓவியங்களின் மீது கரிப்படிவுகள் படிந்து வருகின்றன. இதனால் ஓவியங்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பேராசிரியர் கந்தசாமி கூறியதாவது,
ராஜபாளையம் வட்டத்தில் புத்தூர் மலையில் ஏராளமான தொல்லியல் சார்ந்த தடயங்கள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் ஏற்கனவே நுண்கற்கால கருவிகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தூர் மலை பல ரகசியங்கள் நிறைந்த பகுதியாக மக்கள் கருதுவதற்கு இதுவே காரணமாகும். இம்மலையைச் சுற்றிலும் இயற்கையாக அமைந்துள்ள குகைத்தளங்கள் புடவுகள், பாறை இடுக்குகளில் மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். புத்தூர் மலையின் முகப்பில் தென்மேற்கு பகுதியில் வடக்கு பார்த்த ஒரு குகை தளத்தில் சமண கற்படுக்கை ஒன்று அமைந்துள்ளது. சமணர்கள் குகையில் தியானம் மேற்கொண்டு வாழ்ந்துள்ளனர்.
அத்தோடு மலை அடிவாரத்திலும் இரண்டு தனித்தனி குகைகளும் தியான அறைகளும் காணப்படுகிறது. எனவே புத்தூர் மலை ஒரு சமணத்தளம் என்ற ஒரு வரலாற்றையும் தாங்கியுள்ளது. அருகில் அமைந்துள்ள மீனாட்சிபுரத்தில் பாறை ஓவியங்களும், பழங்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்களும் பெருங்கற்கால எச்சங்களும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கும், இங்கும் பாறை ஓவியங்களில் அதிகமான விலங்குகளும், மனிதர்களும், வேட்டைக் காட்சிகளும், வரையப்பட்டுள்ளது பழங்கால மக்களின் வாழ்வியல் எண்ணங்களை பிரதிபலித்து வரலாற்றை வெளிப்படுத்துகிறது. அதோடு அக்கால மக்களின் தொழில் நுட்பத்தையும் வெண்சாந்தை கொண்டு வரையப்பட்ட ஓவியம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது என்று கூறினார்.

எனவே, இவ்வோவியங்களின் தொன்மையையும், வரலாற்று முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களும், கோவில் நிர்வாகத்தினரும் அவற்றைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
செய்திகள் : ராதாகிருஷ்ணன் /எதிரொலி . இன் / 8939476777
