இயக்குநர், மருத்துவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட கமிட்டி நியமனம்.
​_____________

காஞ்சிபுரம் காரைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் காலாவதியான கடலை எண்ணெய் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இம்மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் சுமார் 250 முதல் 300 பேருக்கு நாள்தோறும் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளையும் உணவுகள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கிச்சனிலேயே தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

சமையல் பணிக்காக 7 ஊழியர்கள் உள்ள நிலையில், உணவின் தரத்தை கண்காணிக்க ஒரு தலைமை செவிலியரும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உணவுப் பொருட்கள் அனைத்தும் காப்பீட்டு நிதியின் மூலம் ஸ்டோர் கீப்பர் ‘இன்டென்ட்’ கொடுத்து, தமிழ்நாடு கூட்டுறவு சிறப் பங்காடி மூலமாக மாதா மாதம் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

​​இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கொள்முதல் செய்யப்பட்ட ‘மருதம்’ பிராண்ட் 1 லிட்டர் அளவுள்ள கடலை எண்ணெய் பாட்டில்கள், “தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும்” என்ற விதிமுறை முடிவடைந்தும் , கடந்த 27 நாட்களாக சமையலுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.

​செய்தியாளருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மருத்துவமனையில் ஏராளமான காலாவதியான கடலை எண்ணெய் பாட்டில்கள் உள்ளது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து, மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சரவணன் மற்றும் நிலைய அலுவலர் சிவகாமி, மருத்துவமனை கண்காணிப்பாளர், அட்மினிஸ்ட்ரேஷன் அலுவலர் ஆகியோருடன், கிச்சனுக்கு அருகே உள்ள அரிசி குடோனை திறந்து பார்த்தபோது, அங்கு மூட்டை மூட்டையாக மறைத்து வைத்திருந்த கடலை எண்ணெய் கேன்களை பார்த்த அதிகாரிகள் அதிர்ந்து விட்டனர்.

அங்கு சுமார் 200 லிட்டருக்கும் மேலான காலாவதியான கடலை எண்ணெய் பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு ஆவேசமுற்ற இயக்குனர் சரவணன், ஸ்டோர் இன் சார்ஜ் சடையாண்டி உள்ளிட்ட அனைவரையும் கடுமையாக கடிந்து கொண்டார்.

​”காலாவதியான எண்ணெயைப் பயன்படுத்தினால் புற்று நோயாளிகளுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என்பது கூட தெரியாதா?” என அங்கிருந்த ஊழியர்களைக் கடுமையாக எச்சரித்த இயக்குநர், தவறிழைத்த அனைவருக்கும் ‘மெமோ’ வழங்க உத்தரவிட்டார்.

மேலும், இதுகுறித்து விரிவாக விசாரிக்க 3 மருத்துவர்கள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கை விரைவில் மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு தாக்கல் செய்யப்படும் என்றும் இயக்குநர் தெரிவித்தார்.

​சில தினங்களுக்கு முன்பு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண் ராஜ் அவர்கள், மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய வருவதற்கு முன்னதாக, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்துவிட்டு, “எந்தக் குறையும் இல்லை” எனக் கூறிச் சென்றதாக கூறப்படுகின்றது .

உணவுத்துறை அதிகாரிகள் கண் துடைப்புக்காக ஆய்வு செய்ததற்க்கு பிறகும் காலாவதியான எண்ணெய் கேன்கள் சமையலுக்கு பயன்படுத்தி வந்ததும், தற்போது 200 லிட்டர் காலாவதியான எண்ணெய் பாட்டில்கள் கண்டறியப்பட்டதும், அதிகாரிகளின் அலட்சியத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

​புற்றுநோயாளிகள், குறிப்பாக கீமோதெரபி (Chemotherapy) சிகிச்சை பெறுபவர்கள், மாத்திரைகளோடு மிகத் தரமான உணவை உட்கொண்டால் மட்டுமே நோய் எதிர்ப்புச் சக்தியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை உள்ளபோது, காலாவதியான எண்ணெயைப் பயன்படுத்துவது அவர்களின் உயிரோடு விளையாடுவதற்குச் சமம் என நோயாளிகளின் உறவினர்கள் கொந்தளிக்கின்றனர்.
காலாவதியான எண்ணெயில் ‘ஆக்ஸிஜனேற்றம்’ (Oxidation) ஏற்பட்டு எண்ணெய் ‘சிக்கல்’ அடையும்.
இதனால் உருவாகும் ‘ஃப்ரீ ரேடிக்கல்கள்’ கீமோதெரபியால் பாதிக்கப்பட்ட செல்கள் மீண்டும் மீண்டு வருவதைத் தடுப்பதோடு, ஆரோக்கியமான செல்லின் DNA-வையும் சேதப்படுத்தும்.

​கீமோதெரபி மருந்துகளைக் கையாளுவதற்கே கல்லீரல் கடுமையாக உழைக்கும் நிலையில், இந்த நச்சு எண்ணெய் கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரல் செயலிழப்பை தூண்ட செய்யும், அது மட்டுமல்லாமல், கெட்டுப்போன எண்ணெயில் உள்ள வேதிப்பொருட்கள் உணவில் உள்ள வைட்டமின் E மற்றும் B ஆகியவற்றை உடல் உறிஞ்ச விடாமல் அழித்துவிடும்.

காலாவதியான உணவு எண்ணெய் கள் செரிமானக் கோளாறு, கடுமையான வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி மற்றும் புதிய தொற்றுகள் (Infections) ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

​கூட்டுறவு சிறப்பங்காடி மூலம் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தவறிழைத்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நோயாளிகளின் நலன்விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுவாகவே கேன்சர் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவுகள் அனைத்தும் மிகவும் தரமானதாக இருக்க வேண்டும் என்பது மருத்துவ விதிகளில் ஒன்று.

காப்பீட்டு திட்டத்தில் பணத்தை குறைவாக பயன்படுத்தினால், ஒவ்வொரு மாதமும் பர்ச்சேஸ் செய்யும் தொகை குறைந்துவிடும் என்ற காரணத்துக்காகவே தேவையில்லாமல் இது போன்ற நிறைய ஐட்டங்களை வாங்கி காலாவதியான நிலைக்கு பொருட்கள், கொண்டு செல்லப்படுகின்றது என்ற குற்றச்சாட்டும் , அளவுக்கு அதிகமாக பர்ச்சேஸ் செய்தால் கமிஷன் கிடைக்கும் என்ற காரணத்தினால், குறிப்பிட்ட அதிகாரிகள் இந்த தவறை செய்கின்றார்கள்.

அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்புகின்றனர்.

செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் /எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed