திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வன்னிப்பாக்கம் ஊராட்சியில், ஜோதி நகர் பகுதியில் அங்கன்வாடி மையம் ஒன்று இயங்கி வந்தது. அந்த கட்டிடம் பழுதடைந்து போன நிலையில், அந்த அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு தனியார் தொண்டு நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் கடந்த 2025 ம் ஆண்டு துவங்கப்பட்டு, கட்டிடம் கட்டக்கூடிய பணிகள் நடந்து வந்தது. 70% சதவிகிதம் பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்தாண்டு இறுதி கட்டத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொய்வு அடைந்து கட்டிட பணி பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக ஏற்கனவே இருந்த பழைய கட்டிடம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அங்கன்வாடி மையம் அருகில் உள்ள சேவை மைய கட்டிடத்தில் நடந்து வருகிறது. அந்த சேவை மைய கட்டிடத்தில், கூட்ட அரங்கம், ஊராட்சி மன்ற தலைவர் அறை, அலுவலக அறை, பதிவேடுகள் காப்பக அறைகள் என அமைக்கப்பட்டு இருக்கும். அதில், கூட்ட அரங்கம் அறையில் கட்டுமான பொருட்களும், பழைய பொருட்களும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், 10 அடி அகலமும், 14 அடி நீளமும் கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் அறையில், கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. அதற்கு எதிர் திசையில் 9.5 அடி அகலமும், 10 அடி நீளமும் உள்ள அலுவலக அறையில் தான் தற்போது இந்த அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. அந்த குறுகிய இடத்தில் தான் குழந்தைகள் அமர்ந்து படிக்கவும், அடி-பாடவும், விளையாடவும் வேண்டும். மேலும், அதே அறையில் சிலிண்டர், கேஸ் அடுப்பு வைத்து குழந்தைகளுக்கு தேவையான உணவு பொருட்களும் தயார் செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது.

வெளிவராண்டாவில் குழந்தைகள் அமர வைக்க வேண்டும் என்றாலும், கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பொதுமக்கள் வந்து சென்று கொண்டிருக்க கூடிய சூழ்நிலையும் இருக்கும். மேலும், சேவை மைய கட்டிடத்திற்கு குழந்தைகள் நடந்து செல்ல வேண்டிய நடைமேடையும் பழுதடைந்து உடைந்து போன நிலையில் உள்ளது. அதற்கு எதிர் புறத்தில், குழந்தைகள் வராண்டாவில் இருந்து கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக சிமெண்ட் ஸ்லாப்புகள் தடுப்பாக வைக்கப்பட்டும் , துணி புடவை ஒன்று குறுக்கே கட்டப்பட்டும் உள்ளது. குழந்தைகள் அதில் ஏறி விளையாட கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் ஆபத்துதான்…

இப்படிப்பட்ட மிகவும் அபாயகரமான சூழ்நிலையில் ஜோதிநகர் பகுதி அங்கன்வாடி மையம் தற்போது இயங்கி வருகிறது. இது குறித்து, கடந்த பல மாதங்களாக அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம், மீஞ்சூர் பி.டி.ஓ-விடவும் பலமுறை முறையிட்டும் இதுவரை அதற்கான எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது.
மேலும், தற்போது, கிராம ஊராட்சிகளின், வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் இரண்டு மாதத்திற்கு முன்பு நாம் நேரடியாக இதுகுறித்து விசாரித்த போது, ” அது குறித்த தகவல் எதுவும் தனக்கு தெரியாது எனவும், பொறியாளர் துறை அதிகாரிகளிடம் விசாரித்து கூறுகிறேன்.” என தெரிவித்திருந்தார். ஆனால், இன்றுவரை அந்த அங்கன்வாடி மையம் கட்டிடம் பணி, ஏன்? பாதியில் நிற்கின்றது என்று அதிகாரிகளுக்கும் தெரியவில்லை, பொதுமக்களுக்கும் தெரியவில்லை….
செய்திகள் : வாசகர் குரல் / எதிரொலி . இன் / 8939476777

