தவறு செய்தவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடுகளை வசூலிக்கவும் முன்னாள் தலைவர் மார்நாட்டான்
மதுரைமாவட்ட ஆட்சித் தலைவருக்கு வேண்டுகோள் ;
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் முள்ளிப் பள்ளம் ஊராட்சியில் கடந்த 2020 முதல் 2024 வரையிலான காலத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மார்நாட்டான் மதுரைமாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்திலும் புகார் மனு அளித்திறந்த நிலையில் தொடர் நடவடிக்கைக்காக முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்திருந்தார் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை செய்து சிறப்பு தணிக்கை கிராம சபை கூட்டத்தையும் நடத்தி கிராம சபை கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது இந்த நிலையில் ஊராட்சியில் 100 நாள் பணியில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் குறைதீர் அலுவலர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக வரப்பு மேம்படுத்துதல் பணியில் அரசு வேலையில் உள்ள நபர்கள் மற்றும் வெளியூரில் வசிக்கும் நபர்களின் பெயரில் 100 நாள் வேலைப் பணிகள் வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் முள்ளி பள்ளம் கிராமத்தில் வசிக்காத மற்றும் வேலை செய்யாத வெளியூர் நபர்களின் பெயரில் வாய்க்கால் வரப்பு மேம்பாடு வேலை பார்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
மேலும் அதிகாரிகளின் நேரடி கள ஆய்வு விசாரணையின் மூலம் 100 நாள் அட்டை இல்லாதவர்கள் பெயரில் அட்டை இருப்பவர்களின் பெயர் மாற்றி அவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு உள்ளதாகவும் முள்ளிப்பள்ளம்
ஊராட்சி அலுவலகத்தில் வாய்க்கால் வரப்பு மேம்பாடு வேலை செய்ததற்கான இடம் பெறப்பட்ட விண்ணப்பம் ஒப்புதல் கடிதம், பட்டா, சிட்டா போன்ற அடங்கள் நகல் எதுவும் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அரசு வேலையில் உள்ளவர்களுக்கும் வெளியூரில் வசிக்கும் நபர்களுக்கும் 100 நாள் வேலை கொடுக்கக் கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில்,
பணித்தள பொறுப்பாளர்கள் தங்கள் கைப்பட அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டதற்கான எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் உள்ளதாகவும் மேலும் அவ்வாறு பெறப்பட்ட கையெழுத்துக்கள் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் மக்கள் நல பணியாளர் ஆகியோர் முன்னிலையில் எழுதி பெறப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 100 நாள் வேலை அட்டை இல்லாமல் உள்ளூரில் வசிப்பவர்கள் சுமார் 74 நபர்களுடைய வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளியூரில் வசிப்பவர்கள், அரசு பணியில் உள்ளவர்கள், மருத்துவ படிப்பு படித்துக் கொண்டிருப்பவர்கள் உள்ளிட்டோர் சுமார் 26 நபர்களுக்கும் 100 நாள் பணிகள் வேலை பார்த்து அதற்கான தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முழு தகவல் சம்பந்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட குறை தீர்ப்பு அலுவலர் மூலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மார்நாட்டானுக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து முன்னாள் தலைவர் மார்நாட்டான் கூறுகையில் ;
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் நடைபெற்ற 100 நாள் வேலை திட்ட பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நீதிமன்றத்திற்கு முறையாக தெரிவிக்கப்பட்டு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடுகளை அவர்களிடமிருந்து வசூலிக்கவும் நீதிமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
இதேபோல் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஆகையால் அனைத்து ஊராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்வதாக கூறினார்.
