தவெக கட்சியின் உட்கட்சி குழப்பம் நடுவீதிக்கு வந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் பேரூராட்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் நகர நிர்வாகிகள் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம், வாலாஜாபாத் பேரூராட்சி நகரப் பகுதிக்கான புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நியமனத்தில், ஆரம்பம் முதலே கட்சியில் இருந்து தொடர்ந்து பணியாற்றியவர்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்றும், புதிதாகக் கட்சியில் இணைந்தவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறி, கட்சியினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

நீண்டகாலமாகக் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும், நிர்வாகிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஏவிஎம் வினோத் உள்ளிட்டோரின் பங்களிப்புக்கு உரிய மதிப்பளிக்கக் கோரி, அதிருப்தியடைந்த தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, வாலாஜாபாத் பேரூராட்சி பகுதியில் உள்ள செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும், தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ முனிரத்தினம் சம்பவ இடத்திற்கு வந்து இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி 2.5 வருடங்களில் உட்க்கட்சி குழப்பம் நடுவீதிக்கு வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் : லட்சுமி காந்தன் / எதிரொலி . இன் / 8939476777
