வாடிப்பட்டி பேரூராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் தங்களை தரக்குறைவாக நடத்துவதாக கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுடன் தூய்மை பணிகள் மற்றும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது, இங்கு 85 பேர் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களாகவும், 10பேர் ஒப்பந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குநர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.


இந்நிலையில் இங்கு செயல் அலுவராக பணியாற்றி வரும் ஆளவந்தான் நாள்தோறும் பணிக்கு வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை தரக்குறைவாக பேசுவதாகவும், அவர்களை சமுதாய ரீதியாக கடுமையாக பேசுவதாகவும், அவரை சந்திக்க சென்றால் வாடை அடிக்கிறது வெளியே செல்லுங்கள் என்று கூறுவதுடன் ஒரு சில நேரங்களில் காரி துப்புவதாகவும் இதனை கண்டித்தும், தங்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்க வலியுறுத்தியும் வாடிப்பட்டி பேரூராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிக்கு செல்லாமல் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரூராட்சியின் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும்
பணிக்கு செல்லாமல் பேரூராட்சி அலுவலக வாயில் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் மு.பால்பாண்டியன், செயல் அலுவலர் ஆளவந்தான் மற்றும் வாடிப்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், தங்களை தரக்குறைவாக பேசும் செயல் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் பணிக்கு செல்ல மாட்டோம் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து வாடிப்பட்டி காவல் நிலையத்துக்கு சென்ற ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் செயல் அலுவலர் தங்களை சாதி ரீதியாக வன்கொடுமை செய்வதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளதுடன் தொடர்ந்து பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வாடிப்பட்டி பேரூராட்சியில் தூய்மைப் பணிகள் மற்றும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளன.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476777
