வத்திராயிருப்பு பகுதியில் மிகவும் புகழ்பெற்ற முத்தாலம்மன் கோவில் பொங்கல் திருவிழாவும் தேரோட்டமும் சிறப்பாக நடந்தது. மழைக்கு அதிபதியான முத்தாலம்மனுக்கு இப்பகுதி மக்கள் ஒரு வாரம் விழா எடுத்து வழிபடுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு திருவிழா அக்டோபர் 7 ல் கலை விழாவுடன் துவங்கியது. 7 நாட்களாக நடந்த கலை விழாவின் முடிவில் நேற்று முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா நடந்தது.

காலையில் அம்மன், சக்தி ஏற்று வைபவத்துடன் மண்டபத்தில் இருந்து கிளம்பி திருத்தேர் எழுந்தருளுக்காக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தேர் எழுந்தருளல் நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. பக்தர்கள் ஆடு கோழி பலியிடுதல், மாவிளக்கு எடுத்தல், அங்கப் பிரதட்சணம் செய்தல் உட்பட பல்வேறு வகையான நேர்த்திக் கடன்களை செலுத்தி வழிபட்டனர். தேர் மீண்டும் நிலைக்கு வந்தவுடன் அம்மன் தேரில் இருந்து இறக்கப்பட்டு கோயிலில் எழுந்தருளல் செய்யப்பட்டார்.

கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனுக்கு உருவ பொம்மைகள் காணிக்கை செலுத்தியும் மஞ்சள் நீர் ஊற்றியும் வழிபட்டனர். பக்தர்கள் மஞ்சள் நீராட்டு வைபவம் நடந்தது. இரவு அம்மன் அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த அம்மன் முதல் நாள் இரவு தோன்றி மறுநாள் இரவு மறைந்து விடுவதால் திருவிழா அன்று இரவே அம்மனை ஆற்று நீரில் கரைத்து விடுவது வழக்கம்.

அதன்படி ஆற்று நீரில் அம்மனை கரைப்பதற்காக பக்தர்கள் அம்மனை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அம்மன் பக்தர்களுக்கு பிரியா விடை கொடுத்து புறப்படும் “பிரியாவிடை” நிகழ்ச்சி நடந்தது இதில் அம்மன் வென்குடையின் கீழ் கோவிலை சுற்றி வந்து கோயிலை சுற்றிலும் நின்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரியா விடை கொடுத்து புறப்பட்டார். பக்தர்கள் அம்மனுக்கு பூக்களை தூவியும் குலவையட்டும் கண்ணீர் மல்க அம்மனை வழி அனுப்பி வைத்தனர்.

கலை விழாக்களுக்கான ஏற்பாடுகளை முத்தாலம்மன் பக்த சபா கமிட்டியினரும் தேரோட்ட திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஜோதிலட்சுமி, அறநிலையத்துறை அதிகாரிகள் பக்தர்கள் ஊர் பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்தனர்.

வத்திராயிருப்பு, சேது நாராயணபுரம், மகாராஜபுரம், தம்பிபட்டி, கூமாபட்டி, புதுப்பட்டி கோட்டையூர் உட்பட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

செய்திகள் : தேவ தர்ஷினி எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed