கொலு என்றால் அழகு என்று பொருள். கல்வி, செல்வம், வீரத்தை மேலோங்கச் செய்யும் விதத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகளை அடுக்கடுக்காக அடுக்கி வைத்து வணங்கி வழிபடும் இறையருளாகும்.

இந்தியாவில் தமிழ்நாடு , கேரளா, ஆந்திரா, கர்நாடகம் பகுதிகளில் இவ்வழிபாடு முறை நடைமுறையாக பின்பற்றப்படுகிறது.

இப்பண்டிகை தமிழ் மாதமான புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையை அடுத்து வரும் பிரதமை திதியிலிருந்து 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இச்சமயம் சக்தியின் வழிபாடாகக் கருதப்படுகிறது.

தீமையை நன்மை வென்றதையும், அன்னை பராசக்தியின் மகிமைகளையும் போற்றும் மிக முக்கிய ஆன்மீகத் திருவிழாவாகும் .

நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகள் என்று பொருள். நவராத்திரியின் ஒன்பது நாள்களும் முப்பெரும் தேவியருக்கும் உரித்தானது.

நவராத்திரி விழாவில், முதல் மூன்று நாட்கள் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி அன்னை துர்க்கையை வழி பட வேண்டும்.

அடுத்த மூன்று நாட்கள் எல்லாவிதமான ஐஸ்வர்யங்களையும் வேண்ட மகாலட்சுமியை வழிபட வேண்டும்.

கடைசி மூன்று நாட்கள் கல்வி, ஞானம், கலைகள் வேண்டி கலைமகளை வணங்க வேண்டும்.

பத்தாம் நாளான விஜயதசமியில் மூவரும் இணைந்த கோலமான ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி, ஸ்ரீ மூகாம்பிகை, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ கமலாம்பிகை போன்ற மகா சக்திகளை வழிபாடு செய்யலாம்.

இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை கடந்த 11-ந் தேதி முதல் 20-ந் தேதி விஜயதசமியுடன் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ஆலயங்கள், இல்லங்களில் வீரம் - தைரியம், அனைத்து ஐஸ்வர்யம் , கல்வி, மழை, ஆறுகள், விவசாயம், 18 சித்தர்கள், அஷ்ட பைரவர்கள், சப்தமாதா, நவகிரகங்கள் பாம்பே மாடலில் கண்ணன் ராதை நிறைந்த கொலு பொம்மைகளை பல வர்ண மின் விளக்குகள் ஜொலிக்க அடுக்கடுக்காக அடுக்கி வைத்து காலை, இரவு பக்தி பாடல்களை பாடி கோலாகல சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இரவு நேரத்தில் , கொலு பொம்மை தரிசனம் செய்வதற்காக அக்கம்- பக்கம் இல்லத்தை சேர்ந்தவர்கள், உறவினர்கள், அன்புள்ளங்கள் என பெண்கள், குழந்தைகள், ஆண்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். தரிசனம் செய்ய வருபவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒன்றை பிரசாதமாக சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், லெமன் சாதம், புளியோதரை, பாசிப்பயறு , கடலைபருப்பு , வெள்ளை கொண்டைக்கடலை, சிவப்பு கொண்டைக் கடலை என வித,விதமாகச் செய்து பிரசாதமாக வழங்கி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கோவில்கள், இல்லங்களில் இப்பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவதால் பரமக்குடி உள்பட தமிழ்நாடு முழுவதும் பக்தி மயமாக காட்சியளிக்கிறது .

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed