சுமார் 2 வருடம் ஆகியும் காஞ்சிபுரம் மாநகரத்தில் போக்குவரத்து ஆய்வாளர் நியமிக்காத அவலம்…
​

​கோயில்களின் நகரம், பட்டு நகரம் என்ற பெருமைகளுக்குச் சொந்தமான காஞ்சிபுரம் மாவட்டத் தலைநகரில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

​பன்னாட்டு நிறுவனத் தொழிலாளர்களின் வருகை, திருமண வைபவங்கள் மற்றும் கோயில் திருவிழாக்கள் காரணமாக காஞ்சிபுரம் மாநகரம் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். இந்நிலையில், நகரின் முக்கியத் பகுதிகளாக விளங்கும் நான்கு ராஜவீதிகள், காமராஜர் வீதி, நெல்லுகார தெரு, காந்தி சாலை, மேட்டுத் தெரு மற்றும் சாலைத் தெரு ஆகிய பகுதிகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அலைமோதுகின்றன.

​இந்த நெரிசலுக்கு முக்கியக் காரணம் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் போதிய அளவு போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்படாததே ஆகும். நகரின் போக்குவரத்தைச் சீரமைக்கக் குறைந்தபட்சம் 24 காவலர்கள் பணியில் இருக்க வேண்டிய சூழலில், தற்பொழுது வெறும் 7 போக்குவரத்து காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

​இன்று காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி தொடர் விடுமுறை காரணமாக வெளியூர்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் படையெடுத்தன. தெருக்களிலும் பாதசாரிகள் கூட நடந்து செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது. சிக்னல்களிலும், முக்கியச் சந்திப்புகளிலும் போக்குவரத்தைச் சீரமைக்கக் காவலர்கள் இல்லாததால், கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கும் மேலாக மாநகரமே ஸ்தம்பித்தது.

​மேலும், காமராஜர் சாலையில் உள்ள பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டுப் பயணிகள் ஏற்றப்படுகின்றனர். ஆங்காங்கே ஆட்டோக்களை நடுரோட்டில் நிறுத்தி ஆட்களை ஏற்றுவதாலும், சாலை யோரங்களில் வாகனங்களை கண்டபடி நிறுத்திச் செல்வதாலும் பாதசாரிகளும், பிற வாகன ஓட்டிகளும் அப்பகுதியைக் கடக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

​எனவே, காஞ்சிபுரம் மாநகராட்சிப் பகுதிகளில் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு உடனடித் தீர்வு காண வேண்டும். முக்கியச் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளைத் தயவு தாட்சண்யமின்றி அகற்ற வேண்டும் என்றும், தேவைக்கேற்ப கூடுதல் போக்குவரத்து காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed