மெஜாரிட்டி இல்லாமல் நடந்த கிராம சபைக் கூட்டம்…


சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் உள்ளது காஞ்சிரங்கால். இந்த ஊரில் இன்று மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தீபா முன்னிலையில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் தேவைகள் நிறைவேற்றப்படாதது குறித்து பேசினார்கள்.

அப்போது, புதூர் – கிருஷ்ணா நகர் 5வது தெருவில் சாலையானது வருடக் கணக்கில் சேதம் அடைந்து உள்ளது. அந்த தெருவில் கழிவு நீர் ஆண்டு கணக்கில் தேங்கிக் கிடக்கிறது. இதை பஞ்சாயத்து நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை. புதூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகில் கழிவுநீரை வடிகட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தின் அருகிலும் , முனியாண்டி கோவில் செல்லும் வழியிலும் தெருவிளக்குகள் எரியவில்லை. கக்கன்ஜி காலனியில் பிள்ளத்தியான் வீடு முதல் லதா வீடு வரை சாலை முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நர்சரியில் குறிப்பிட்ட பெண்களே தொடர்ந்து வேலை செய்கிறார்கள். இதில் புதிய ஆட்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும்.

சென்ற முறை நடந்த கிராம சபை கூட்டத்தில் வைத்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என ஆண்களும், பெண்களும் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மீது சரமாரி குற்றம் சாட்டினார்கள். அப்போது கூட்டத்தில் 25 பெண்களும், 10 ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். கூட்டத்தில் தீர்மானங்களை முறையாக நிறைவேற்ற மூன்றில் ஒரு பங்கு மெஜாரிட்டி (கோரம்) இல்லாமல் இருந்தது.

காஞ்சிரங்கால் பஞ்சாயத்தில் இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகள் இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும், என கிராம சபை கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் கோரிக்கை வைத்தனர்.

செய்திகள் : ஆனந்த் எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed