திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காசுகளில் கணபதி சிறப்பு கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது.
அதில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவன தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார்.
சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், வரலாற்று ஆர்வலர் அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் காசுகளில் கணபதி நாணயங்களை காட்சிப்படுத்தி பேசுகையில்,
இந்தியாவில் விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் எனப்படுகிறது. இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும் யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.

இந்துக்களின் புராணங்களில் விநாயகர் மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும் முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் கூறப்படுகிறார். இக்கடவுளின் வாகனம் மூஞ்சூறு .
’கணேச புராணம்’, கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுப்படுகிறது.இக்கணபதி காசு சங்க காலத்திற்கும் நவீன காலத்திற்கும் இடைப்பட்ட காலங்களில் வெளியிடப்பட்டுள்ளன. நாயக்கர் காலங்களில் பல காசுகளில் இந்து மத கடவுள் உருவம் பொறித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பழங்காலத்தில்
தமிழர், நாணயச் செலாவணி முறையை அறிந்திருந்ததோடு தாமே நாணயங்களை உருவாக்கிப் புழக்கத்தில் விட்டனர். சங்க காலம் முதல் சோழர், பாண்டியர் காலங்கள் வரையிலுமான பழங்கால நாணயங்களில் உலோகங்களைப் பயன்படுத்தியுள்ளனர். அதன் வகை, தரம் முதலியன மக்களின் உற்பத்தித் திறனையும் அவர்களது பொருளாதார நிலையையும் எடுத்துக்காட்டுகிறது.
மேலும், நாணயங்கள் கிடைக்கின்ற இடத்தை வைத்து உரிய மன்னரின் நாட்டு எல்லை, வணிகத் தொடர்பு முதலியவற்றைக் கணிக்கலாம். சில நாணயங்கள் வணிகர்கள், பொற்கொல்லரின் அமைப்புகளால் ஆட்சியாளர்களின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டன. வாணிகமும் கைவினைத் தொழிலும் பெற்றிருந்த முதன்மைத்துவம் இதனால் வெளிப்படுகிறது. நாணயங்களில் அரசன், தெய்வங்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. சமயச் சின்னங்களும் அவற்றில் இடம்பெறுகின்றன. இவை அக்காலத்தின் கலைகளையும் சமயங்களையும் அறிந்துகொள்ள உதவுகின்றன.

நாணயத்தின் மதிப்பு அகமதிப்பு, புற மதிப்பு, தொன்மை மதிப்பு என்று பகுக்கப்படுகிறது. நாணயம் என்பது வணிகப் பொருளாக மட்டுமின்றி, அது வெளிவந்த காலத்தின் நாகரிகம், பொருளாதாரம், கலாசாரம், வரலாற்றுத் தகவல்களை தெரிவிக்கும் ஊடகமாக உள்ளது.
தமிழகத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் அனைவருமே தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தும் யானை, புலி, மீன், குதிரை, காளை, சிங்கம் போன்ற விலங்குகள், பறவைகள், மற்றும் சமயம் சார்ந்த உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டுள்ளனர்.
கி.மு.முதலாம் நூற்றாண்டு வரையிலும் ரோமானிய செம்பு காசுகள் கிடைத்துள்ளது. முகலாய மன்னர் அக்பர் ராமர், சீதை உருவம் பொறித்த நாணயங்களும், ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆட்சியில், சிவன்- பார்வதி உருவம் பொறித்த நாணயங்களும் வெளிவந்துள்ளன. ஆற்காடு நவாப் ஆட்சியில், அதிக அளவில் சைவ, வைணவ கடவுள்களான சிவன், விஷ்ணு, கணபதி, முருகன், அனுமன் நாணயங்களை வெளியிடப்பட்டுள்ளன. இது அவர்கள் ஆட்சிக் காலத்தில் நிலவிய மத ஒற்றுமைக்கும், சகிப்புத்தன்மைக்கும் சான்றாக உள்ளது. ஹொய்சாளர் மன்னன் வீர சோமேசுவரன் (கிபி 1233- 1263) போசலீஸ்வரம் என்னும் சிவன் கோவிலை சமயபுரம் கண்ணனூரில் எழுப்பினார். சிவன் கோவில் நினைவாக சில காசுகளை வெளியிட்டுள்ளார். 1.2 கிராம் எடைகொண்ட செம்பு காசின் முன் பக்கத்தில் கணபதி அமர்ந்த நிலையிலும்,பின்பக்கத்தில் வட்டத்திற்குள் செங்குத்தாக அங்குசம் உள்ளது.
மதுரை நாயக்கர் காலத்தில் வெளியிடப்பட்ட காசுகளில் கணபதி முன் பக்கத்தில் அமர்ந்த நிலையிலும் பின்பக்கத்தில் ஸ்ரீ மங்கம்மா, ஸ்ரீரங்க, ஸ்ரீ வீர என தெலுங்கு எழுத்துக்கள் பெயர் பல்வேறு காசுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும் காசி முன் பக்கத்தில் அமர்ந்து கணபதியும் பின்பக்கத்தில் கணபதி என்று தமிழில் இரண்டு வரிகளில் செம்பு உலோகத்தின் 2.2 கிராம் எடை கொண்ட காசில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஆரூர் காசுகள் முன்பக்கத்தில் கணபதி அமர்ந்த நிலையிலும் பின்பக்கத்தில் ஆரூர் என பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மைசூர் உடையார் காசின் முன்பக்கத்தில் கணபதி அமர்ந்த நிலையில் உள்ளார். பின் பக்கத்தில் பல கட்டங்கள் உள்ளன காசு செம்பு உலகத்தில் மூன்று கிராம் எடையுள்ளது. சேதுபதி காசுகளில் காசின் முன் பக்கத்தில் அமர்ந்த நிலையில் கணபதி உள்ளார் பின்பக்கத்தில் செதுபதி என்ற இரண்டு வரிகளில் தமிழில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. தெலுங்கிலும் செதுபதி என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.செம்பு உலோகம் 1.8 கிராம் எடை உள்ளது. திருவாங்கூர் காசில் கணபதி பின்பக்கத்தில் புள்ளி உள்ளது.
ஆற்காடு நவாபுக் காசுகளில், காசின் முன் பக்கத்தில் வலது பக்கம் நோக்கி நிற்கும் நிருத்த கணபதி உள்ளார். பின்பக்கத்தில் நெரிசல் எழுத்தில் ஷா, வாலாஜா பாரசீக எழுத்திலும் நவாபு என்றும் இரண்டு வரிகளில் தமிழ் எழுத்துக்கள் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. செம்பு உலோகம் 3 கிராம் எடை உள்ள காசு ஆகும். பழனி பாளையக்காரர் காசுகளில் காசு முன் பக்கத்தில் கணபதி அமர்ந்த நிலையில் உள்ளார் பின்பக்கத்தில் பழனி என்று இரண்டு வரிகளில் தமிழில் ஊரின் பெயர் உள்ளது. செம்பு உலோகம் 2.5 கிராம் எடையுள்ள காசு ஆகும் என்றார். மேலும் தமிழர் குடைவரை கோவிலில் காணக் கிடைக்கும் பிள்ளையார் சிற்பங்கள் புகைப்பட காட்சி அரச மரபினர் வாரியாக வைக்கப்பட்டிருந்தது பாண்டியர் முத்தரையர் பல்லவர்கள் என 28 பிள்ளையார் சிற்ப புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டன.

பாண்டியர் குடைவரைகளில் பிள்ளையார்பட்டி, செவல்பட்டி ,திருக்கோளக்குடி, மலைய கோவில், தேவர்மலை, அரிட்டாபட்டி ,திருமலைபுரம், குன்றக்குடி கிழக்கு, திருக்கோகர்ணம் குடவரை அர்த்தமண்டபம், திருக்கோகர்ணம் அன்னையர் எழுவர் தொகுதி, குன்னத்தூர் நீலகண்டேஸ்வரர், குன்னத்தூர் உதயகிரி, குடுமியான்மலை, வட பறங்குன்றம், மூவரை வென்றான், மகிபாலன்பட்டி, வீரசிகாமணி, ஆண்டிச்சிப்பாறை, அரளிப்பட்டி, குறத்தியறை, குன்றக்குடி இரண்டாம் குடைவரை , முத்தரையர் குடைவரைகளில் ஆலத்தூர் தளி மலையடிப்பட்டி, குன்றாண்டார் கோவில், பூவாளைக்குடி, பல்லவர் கால குடைவரைகளில் வல்லம் முதல் குடைவரை, வல்லம் இரண்டாம் குடைவரை, சிராப்பள்ளி கீழ் குடைவரை, சிராப்பள்ளி ஜட ஜம்பு நாதர் , பல்லவர் காலக்கற்றளிகளில் காஞ்சி இராஜ சிம்மேசுவரம், திருத்தனி வீரட்டானேஸ்வரம், தக்கோலம் ஜல நாதீசுவரம், குடைவரை காலத்திற்குப் பின் அமைக்கப்பட்ட தென்பரங்குன்றம், குடிமியான்மலை, சிகாரி பல்லவேசுவரம் என தமிழகத்தின் பழம்பெறும் வழிபாடுகளில் கணபதி வழிபாடும் சிறப்பாக இருந்ததை காட்சிப்படுத்தி வரலாற்று தரவுகள் மூலம் எடுத்துரைத்தார்
செய்திகள் : விஜயகுமார் / எதிரொலி / 8939476777
