ராமநாதபுரம் மாவட்டம், பட்டிணம்காத்தான் ஊராட்சியில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வின் போது, திடக்கழிவுகள் மக்கும் , மக்காத கழிவுகளாக முறையாக தரம் பிரித்து மேலாண்மை செய்யப்படுகிறதா, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறதா ? என்பதையும் ஆய்வு செய்தார்.

மேலும், குப்பைக் கிடங்கில் ஏற்பட்டிருந்த தீயை உடனடியாக முழுமையாக அணைத்து, மீண்டும் தீ பரவாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொண்டு பாதுகாப்பு , பராமரிப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, திரு உத்திரகோசமங்கை ஊராட்சியில் பெரிய ஊரணியில் மாசடைந்துள்ள நீரை வெளியேற்றி ஊரணியை சுத்தம் செய்யவும், இந்திரா நகர் பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித்தரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

மேலும் , கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாயல்குடி பேரூராட்சி பகுதியில் காவிரி குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி பொதுமக்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களது கோரிக்கைகள் , குறைகளை கேட்டறிந்தார்.
மேலும், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை விரைந்து செய்ய அலுவலர்களை அறிவுறுத்தினார்.
கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எம்.கரிசல்குளம் ஊராட்சி, ஒச்சதேவன் கோட்டை கிராமத்தில் பொதுமக்கள் அளித்த கோரிக்கைகளை கேட்டறிந்து, மலட்டாறு பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து கிராமத்திற்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தியதுடன்,

மேலும், அப்பகுதியில் பகுதி நேர நியாயவிலைக் கடை அமைப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், பள்ளி மாணவர் – மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை , மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்துவது குறித்து அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளரிடம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
பின்னர் , பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெல்மடூர் ஊராட்சியில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், குப்பைக் கிடங்கின் அருகாமையில் குடியிருப்புப் பகுதிகள் உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது , ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புகண்ணன் , மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் சோமசுந்தரம், திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் , உதவி பொறியாளர் பாலகுமார் , கடலாடி வட்டாட்சியர் பரமசிவன் , கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரபாண்டியன் , பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் திரு ஜானகி , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி. சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
