உரிமை கொண்டாடி காவல்துறை பாதுகாப்புடன் கல்குவாரி வேலையை தொடங்கும் கல்குவாரி உரிமையாளர்கள் ;
சட்டவிரோத கல்குவாரியை மூடுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சி க.புதூர் அருவிமலை அடிவாரத்தில் புல எண் 697/2-ல் உள்ள வி.ஆடுதுரை கல்குவாரி சிறுகனிம சலுகை விதிகள் 1959-யை மீறி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது. இதில் பல்வேறு சட்டவிதிமீறல்கள் நடந்துள்ளது. கருப்பாயூரணி,அருவி குளம்,வெள்ளுத்து நீருற்று ஆகிய நீர்நிலைகளும்,ஓடைகளும்,அங்கீகரிக்கப்பட்ட வீடுகளும்,சாலைகளும் ,கற்படுக்கைகள்,கல்வெட்டு போன்ற தொல்லியல் சின்னங்களும்,வழிபாட்டு கோயில்களும்,விவசாயமும்,அழிவின் விளிம்பு நிலையில் உள்ள அரிய வகை சாம்பல் நிற தேவாங்குகளும்,பல்லுயிர் சூழலும் சிறுகனிம சலுகை விதிகள் வரையறுக்கப்பட்ட சட்டங்களுக்கு புறம்பாக உண்மை ஆவணங்களை மறைத்து சட்டவிரோதமாக நடைபெற்று வந்துள்ளது.

இதனால் க.புதூர்,களப்பாரை, பால்குடி,முத்துகருப்பன்பட்டி,அய்வத்தான் ஊர் பொதுமக்களின் குடிநீர்,வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்த கல்குவாரியை மூடுவதற்கு கடந்த ஆண்டு சாலை மறியல் போராட்டம் செய்தார்கள். மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள் நடவடிக்கை இல்லை.
இருப்பினும் ஏக போகமாக கல்குவாரி வேலை நடைபெற்று வந்தது.
இந்த போராட்டம் வீரியமாக கடந்த 15.06.2026 அன்று மறுபடியும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின் விளைவாக மேலூர் வட்டாட்சியர்,கனிம வளத்துறை தற்காலிகமாக மூடுவதாகவும்,விதிமீறல்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்பு முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மக்களும் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டார்கள்.
அதற்கு பின்பு கல்குவாரி குண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களையும், முன்னணியாக நின்றவர்களையும் அச்சுறுத்தும் வேலையை செய்தார்கள்.
மக்களும் கொட்டாம்பட்டி காவல்துறையிடம் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு கொடுத்தார்கள்.
கல்குவாரி மூடிய பின்பும் கல் உடைக்கும் வேலைகள் நடந்து வந்தது.
இந்நிலையில் மீண்டும் கல்குவாரியை திறப்பதற்கான முயற்சிகளை கல்குவாரி உரிமையாளர்கள் எடுத்து வருவதை அறிந்த பொதுமக்கள் 18.09.2026 அன்று மேலூர் வட்டாட்சியரிடம் கல்குவாரியை திறப்பதற்கு அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி மனு கொடுத்தார்கள்.

அதற்கு பின்பு முன்னணியில் செயல்பட்ட செயற்பாட்டாளர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் கல்குவாரி குண்டர்கள் மிரட்டல் விடுக்கும் வேலையை செய்துள்ளார்கள்.
இந்த சூழலில் 05.10.2026 மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் சார்பாக மனு கொடுக்கப்பட்டது.
இதுபற்றி மதுரை சுரங்கத்துறை அலுவலர் கல்குவாரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கல்குவாரியில் ட்ரோன் மூலம் டிஜிட்டல் அளவை செய்யப்பட்டுள்ளதாகவும்.
அங்குள்ள இயந்திரங்களை வெளியேற்றுவதாகவும்,கல்குவாரி முழுமையாக ஆய்வு செய்வதாகவும் கூறினார். இருப்பினும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.

06.10.2026 அன்று மாலை 6.00 மணிக்கு கல்குவாரியில் இருந்து கற்களை கிட்டாச்சி இயந்திரத்தின் மூலம் லைலாண்டு வண்டியில் அள்ளி உள்ளார்கள். இதை பார்த்த க.புதூர் மக்கள் கிட்டாடச்சியை சிறை பிடித்து மேலூர் வட்டாடட்சியரிடம் புகார் கொடுத்தும் வரவில்லை.
காவல்துறை மட்டும் வந்தது.
இருப்பினும் மக்கள் கிட்டாச்சியை மேலூர் வட்டாட்சியர் வந்து பறிமுதல் செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை வைத்து இரவிலிருந்து சாலையில் உறங்கி போராட்டத்தை முன்னெடுத்து மறுநாள் பகலிலும் போராட்டம் தொடங்கியது.
இதை மடைமாற்றும் விதமாக கல்குவாரி உரிமையாளர்கள் கல்குவாரி ஆதரவாளர்களை வைத்து கல்குவாரி வேண்டும் என மறுபுறம் போராட்டம் செய்துள்ளார்கள்.

மேலூர் வட்டாட்சியர் வருகை புரிந்து கிட்டாச்சியை பறிமுதல் முடியாது, வாகன ஒட்டுநருடன் பிடித்து வையுங்கள் வண்டியை பறிமுதல் செய்து, கல்குவாரி இயங்காது என கூறியதால் மக்கள் போராட்டத்தை முடித்துள்ளார்கள்.
இந்நிலையில், நேற்று 01.11.2026 அன்று கல்குவாரி உரிமையாளர்கள் காவல்துறை பாதுகாப்புடன் கல்குவாரியில் வேலையை தொடங்குவதற்கு நீரை வெளியேற்றியுள்ளார்கள்.
தகவல் அறிந்த அந்தப்பகுதி பெண்கள் காவல்துறையிடம் யாரை கேட்டு நீரை வெளியேற்றுகிறீர்கள் என கேட்டதற்கு வட்டாடட்சியரிடம் கேளுங்கள், அரசு அனுமதி கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

கல்குவாரி உரிமையாளர்கள் தார்ச்சாலையே கல்குவாரிக்குள் தான் உள்ளது என கூறியுள்ளார்கள்.
இதை கனிமவள சுரங்கத்துறை அளவீடு செய்து கொடுத்துள்ளார்கள்.
பொதுவாக சிறுகனிம சலுகை விதிகள் 1959-ன்படி சாலையோ, வண்டிப்பாதையோ கல்குவாரி வெளிமுனையில் இருந்து 50 மீட்டர் அளவு இடைவெளி இருக்க வேண்டும்.
இவர்கள் குறிப்பிடும் தார்ச்சாலையை ஒட்டி நீர் ஒடை உள்ளது. ஒடைக்கு 300 மீட்டர் இடைவெளியில் கல்குவாரி அமைக்க வேண்டும் என்பது சட்டம்.
இதை மீறி வி.ஆடுதுறை கல்குவாரிக்கு அனுமதியை கனிமவள சுரங்கத்துறை, மதுரை மாவட்ட ஆட்சியர் கொடுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
க.புதூர்,களப்பாறை, பால்குடி, முத்துகருப்பன்பட்டி,அய்வத்தான்பட்டி ஆகிய ஊர் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை மனுக்களை மதுரை மாவட்ட ஆட்சியர்,அரசு அலுவலர்கள்,கனிமவளத்துறை அமைச்சர் அவர்களிடம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கிராம சபை தீர்மானமும் காகிதத்தோடு நின்றுவிட்டது. அரசு, ஆட்சி, அதிகாரம் மக்கள் கொடுத்தது.
மக்களுக்குதான் அரசு!
அரசுக்காக மக்கள் இல்லை!
உடனடியாக வி.ஆடுதுறை கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
இதற்கு தமிழ்நாடு கனிமவளத்துறை அமைச்சர்,முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
இல்லையென்றால் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம்!!
என்பதை சனநாயக அமைப்புகள், உழவர்கள்,சூழலியல் செயற்பாட்டாளர்கள் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்!
செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
