காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கவும், பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், குழந்தைகளுக்கு முன் பருவக் கல்வியை வழங்கவும் இம்மையங்கள் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றன.

இந்நிலையில், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நகரின் மையப்பகுதியில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவில் மாட வீதியில் 215, 216 மற்றும் 217 ஆகிய எண்கள் கொண்ட அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. இம்மையங்களில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் முன் பருவக் கல்வி கற்று, ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொண்டு வருகின்றனர்.

​நேற்று இரவு, புதிதாகத் திறக்கப்பட்ட இம்மையத்தின் இரும்பு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த 3 எரிவாயு சிலிண்டர்களை திருடிச் சென்றுள்ளனர். இன்று காலை வழக்கம்போல் மையத்தைத் திறக்க வந்த ஊழியர்கள், பூட்டு உடைக்கப்பட்டு சிலிண்டர்கள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாகத் துறை அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கன்வாடி ஊழியர்களிடம் விசாரணை நடத்தி, அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் நகரில் தொடர்ந்து இதுபோன்ற அங்கன்வாடி மையங்களில் சிலிண்டர்கள் திருடப்பட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதிய பாதுகாப்பு இல்லாததால் அங்கன்வாடி ஊழியர்கள் கடுமையான அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மேலும், தொடர் திருட்டில் ஈடுபடும் நபர்களைப் பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
​எனவே, அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், பொதுச் சொத்துகளைப் பாதுகாக்கவும் இரவு நேரங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அங்கன்வாடி ஊழியர்களும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட 106 எண் கொண்ட அங்கன்வாடி மையத்தில் இரண்டு சிலிண்டர்கள் திருடு போனது குறிப்பிடத்தக்கது.

​செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் /எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed