மதுரை மாவட்டம்,
சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டி செல்லும் முக்கிய சாலையான பசும்பொன் நகர் பகுதியில், மிகப்பெரிய அளவிலான கழிவுநீர் கால்வாய் பள்ளம் நீண்ட காலமாக ஆபத்தான முறையில் திறந்தவெளியில் கிடக்கிறது.

இதன் அருகில் மின்சாரக் கம்பங்களும் சாய்ந்து விழும் அபாயகரமான சூழலில் இருப்பதால், அப்பகுதியில் செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் எப்போது வேண்டுமானாலும் விபத்தில் சிக்கும் மரண பீதியில் தவித்து வருகின்றனர்.

இது குறித்து அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் விடுத்த தொடர் புகார்களை அடுத்து சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, தனது கட்சியினருடன் நேரில் சென்று அந்தப் பள்ளத்தையும், மின் கம்பங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, உடன் வந்திருந்த பேரூராட்சி மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகளை அழைத்து, விரைந்து சரி செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், இந்த ஆய்வு வீடியோவை சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ (Reels) ஆகப் பதிவிட்ட தவெகவினர், இரண்டு நாட்களில் பணிகள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்திருந்தனர்.

ஆனால், இந்த நிகழ்வு நடந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அங்கு எந்தவிதமான சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முல்லை சக்தி கூறியதாவது.

சோழவந்தான் பேரூராட்சி மூன்றாவது வார்டு பசும்பொன் நகர் பகுதியில் பொதுமக்கள் வசிக்ககூடிய இடத்தில் ஆபத்தான நிலையில் கழிவுநீர் பள்ளம் உள்ளதாகவும் உடனடியாக அதை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இரண்டு மாதத்திற்கு முன்பு சோழவந்தான் தொகுதி கருப்பையா எம்எல்ஏ அந்த பகுதிக்கு ஆய்வுக்கு வந்திருந்தார் அப்போது அதிகாரிகளும் உடன் வந்திருந்தனர் பள்ளங்களை உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில் இரண்டு மாதத்திற்கு மேலாகியும் தற்போது வரை பள்ளம் சரி செய்யப்படவில்லை.

ஆனால், பள்ளத்தை சரி செய்ததாக கட்சி நிர்வாகிகள் ரிலீஸ் எடுத்து வீடியோவாக வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். இது தமிழக அரசிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும், முதல்வர் எடுக்கும் நடவடிக்கைக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் சொல்லியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் சேதம் அடைந்த பள்ளத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

கழிவு நீர் தேங்கி கிடக்கும் பள்ளம் அருகில் ஆபத்தான நிலையில் மின்சார ட்ரான்ஸ்பார்மர் உள்ளது. ஆபத்தான பள்ளத்தை சரி செய்து உயிர் பயத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *